முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் நவம்பர் முதல் வாரத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க ஏற்பாடு: கவர்னர் தமிழிசை

Tamilsai 2021 10 24

Source: provided

புதுச்சேரி : நவம்பர் முதல் வாரத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. 90 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரியில் இன்று மாநிலம் முழுவதும் இலவச சிறப்பு தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை தனது மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.

மேலும், “நாங்க போட்டுக்கொண்டோம் - நீங்க போட்டுக் கொண்டீர்களா“ என்ற கொரோனா விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டார்.

கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர்," புதுச்சேரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் சதவீதம் 75-ல் இருந்து தாண்டி 80-ஐ நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். 25 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் புதுச்சேரி முழுவதும் நடத்தப்பட இருக்கிறது.

ஏறக்குறைய ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று ஏற்பாடு செய்து வருகிறோம். சில இடங்களில் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். சீனா போன்ற நாடுகளில் நோய்த்தொற்று அதிகரித்திருக்கிறது. கொரோனா தற்போது பெருந்தொற்று நிலையிலிருந்து நிரந்தரமான ஊர்த் தொற்றாக மாறி வருவதாக விஞ்ஞானிகள் கருத்து கூறியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை , "ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் ஏறக்குறைய 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

2 முதல் 8 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வை பாரத் பயோடெக் நிறுவனம் முடித்துள்ளது. அதற்கான அனுமதி பெற முயற்சி நடைபெற்று வருகிறது. இது மிகப்பெரிய சாதனை. கொரோனா சொட்டு மருந்தும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது அறிமுகப்படுத்தப்பட்டால் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும். குழந்தைகள் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை அளவு குறைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து