முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதம் மாறியவர்களுக்கு சாதிமறுப்பு திருமணத்திற்கான சான்று கிடையாது சென்னை ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மதம் மாறியவர்களுக்கு, சாதிமறுப்பு திருமணத்திற்கான சான்று வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ ஆதி திராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்று பெற்ற அவர், தனக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாட்சியர், மதம் மாறியவருக்கு சாதி மறுப்பு மணச் சான்று வழங்க முடியாது எனக் கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பால்ராஜ் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, 'கடந்த 1997 ஆண்டு அரசாணைப்படி மதமாறிய நபர்களுக்கு சாதி மறுப்பு மண சான்றிதழ் வழங்க முடியாது' எனக்கூறி, மனுதரார் கோரிக்கையை நிராகரித்தது சரியே என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மதம் மாறியவருக்கு சாதி மறுப்பு மணச் சான்று வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

’மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை’ எனக் குறிப்பிட்ட நீதிபதி, ‘ஒரே சாதியையோ, வகுப்பையோ சேர்ந்த கணவன் - மனைவிக்கு சாதி மறுப்பு மண சான்று பெற தகுதியில்லை’ எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து, “மதம் மாறியவருக்கு சாதி மறுப்பு மணச் சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும்” எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து