முக்கிய செய்திகள்

சில விஷயங்களில் முடிவெடுப்பதில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இடையே கருத்து வேறுபாடு உள்ளது: அன்வர் ராஜா

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      அரசியல்
Anwar-Raja 2021 11 27

Source: provided

சென்னை : என்னைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சில விஷயங்களில் முடிவெடுப்பதில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே மனக்கசப்பு இருப்பதாகவும் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். 

பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எப்போதும் சசிகலாவை சின்னம்மா என்றுதான் அழைத்து வருகிறோம். அந்த காலத்திலிருந்தே சின்னம்மா என்றுதான் அழைக்கிறோம். இப்போதும் அப்படித்தான் சொல்கிறோம். தி.மு.க. தலைவரை கலைஞர் என்று நான் அன்றைக்கும் சொன்னேன்; இன்றைக்கும் சொல்கிறேன். என்னைத் தவிர்த்து அ.தி.மு.க.வில் எல்லோருமே சின்னம்மா காலில் விழுந்தவர்கள்தான். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான போது, சின்னம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். எடப்பாடி பழனிச்சாமி,  ஓ. பன்னீர்செல்வமும்தான் அ.தி.மு.க.வின் தற்போதைய தலைவர்கள்.

ஓ.பி.எஸ்.சின் மனைவி மறைந்ததற்கு ஸ்டாலின் துக்கம் விசாரித்தார். சின்னம்மா சசிகலாவும் துக்கம் விசாரித்தார். இதுவெல்லாம் அரசியல் நாகரிகம். அதைத்தான் நானும் கடைபிடிக்கிறேன். சசிகலா ஆதரவு ஓட்டு தமிழகத்தில் கணிசமாக உள்ளது. அந்த வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தால் கட்சி வெற்றி பெற்றுவிடும் என்று நிர்வாகிகள் கருதுகின்றனர்.  கட்சியில் சேர்வதற்கு சசிகலா தயாராகத்தான் இருந்தார். ஆனால் அ.தி.மு.க. தரப்பில்தான் யாரும் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதுதான் பிரச்சனை. சசிகலாவை கட்சியில் சேர்த்து தேர்தலை எதிர்கொண்டிருந்தால் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்திருக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சில விஷயங்களில் முடிவெடுப்பதில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே மனக்கசப்பு இருக்கிறது. அதனால்தான் 18 பேர் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.  ஜெயலலிதா காலத்தின்போது பொதுக்குழுவில் பேசுவதற்கு பரிபூரணமான சுதந்திரம் இருந்தது. நல்ல கருத்துக்களை கூறினால் ஜெயலலிதா ரசிப்பார். அப்படி கருத்து சொன்னவர்களை நேரில் அழைத்து பாராட்டுவார். அந்த வகையில் நான் அதிக முறை பாராட்டு பெற்றுள்ளேன். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். இடையே முடிவு எடுப்பதில் கருத்துவேறுபாடு இருக்கிறது. இருவரும் ஒற்றுமையாக இருந்து வழி நடத்தினால் கட்சிக்கு நன்றாக இருக்கும்.  இவ்வாறு அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து