முக்கிய செய்திகள்

மாசு‌ கட்டுப்பாட்டு வாரிய‌ தலைவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      அரசியல்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : தமிழ்‌நாடு மாசுக்‌ கட்டுப்பாட்டு வாரியத்‌ தலைவர் வெங்கடாஜலம் மரணத்தில்‌ மர்மம்‌ இருப்பதாக எதிர்க் கட்சிகள் சந்தேகிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தி.மு.க. அரசு, எப்படி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்புற வாசல்‌ வழியாக தமிழகத்தில்  ஆட்சியைப்‌ பிடித்ததோ, அதுபோல்‌ அரசியல்‌ ரீதியாக, காவல்‌ துறையை, லஞ்ச ஒழிப்புத்‌ துறையை தவறாகப்‌ பயன்படுத்தி, முன்னாள்‌ அமைச்சர்கள்‌ மீது பொய்ப்‌ புகார்‌ சுமத்தி, அமைச்சர்களுடைய வீடுகள்‌ மட்டுமல்லாமல்‌, அவர்களது உறவினர்கள்‌, நண்பர்கள்‌ என்று குறைந்தது, சுமார்‌ 30 - 40 வீடுகளில்‌ சோதனை மேற்கொண்டு வருகின்றனர்‌.

வெங்கடாஜலம்‌, அதிகாரி கடந்த அ.தி.மு.க. அரசால்‌ தமிழ்‌நாடு மாசுக்‌ கட்டுப்பாட்டு வாரியத்‌ தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தார்‌. அவரது பதவி செப்டம்பர்‌ 2021 வரை இருந்தது. மேலும்‌ சுப்ரீம் கோர்ட்டில்‌ வழங்கப்பட்ட தீர்ப்பின்‌ அடிப்படையில்‌, அவர்‌ மேலும்‌ ஒராண்ட பணி நீட்டிப்பு பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால்‌, வெங்கடாஜலம் முந்தைய அ.தி.மு.க. அரசு மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப, நீங்கள்‌ வாக்குமூலம்‌ அளிக்க வேண்டும்‌ அல்லது ராஜினாமா செய்யுங்கள்‌ என்று தி.மு.க. அரசால்‌ மிரட்டப்பட்டதாக கூறப்பட்டது. இவர்‌ ஒருவர்‌ மட்டுமல்ல, இதுபோல்‌ பல அதிகாரிகள்‌ மிரட்டப்பட்டு வருகின்றனா்‌. 

உண்மைக்கு மாறாக, முந்தைய அம்மா அரசுக்கு எதிராக செயல்பட மாட்டேன்‌ என்று உறுதியாக நின்ற அவரை, ராஜினாமா செய்யுங்கள்‌ என்று இந்த அரசு கூறியபோது, அவர்‌ ராஜினாமா செய்ய மாட்டேன்‌ என்று தைரியமாக கூறியதாக செய்திகள்‌ தெரிவித்தன. இந்நிலையில்‌, அவரது வீட்டில்‌ லஞ்ச ஒழிப்புத்‌ துறை மூலம்‌ சோதனை நடத்தி சுமார்‌ 11 லட்சம்‌ ரூபாய்‌ மற்றும்‌ தங்கம்‌, வெள்ளிபோன்ற பொருட்கள்‌ கைப்பற்றப்பட்டதாகக்‌ கூறியது.

வெங்கடாஜலம்‌ சுமார்‌ 35 ஆண்டு காலம்‌ வனத்துறை அதிகாரி என்ற முறையில்‌ மாநிலத்தில்‌ பல்வேறு பொறுப்புகளில்‌ திறம்பட பணியாற்றிய மூத்த வனத்துறை அதிகாரி. அவர்‌ 2 லட்சம்‌ ரூபாய்க்கு மேல்‌ மாத சம்பளம்‌ பெறுபவர்‌. ஒரு திறமை மிக்க, அனுபவம்‌ வாய்ந்த அனைத்திந்திய வனப்‌ பணி மூத்த அதிகாரி இது போன்ற கோழைத்தனமான முடிவுக்கு வருவதற்கு ஒருபோதும்‌ வாய்ப்பில்லை. எனவே தான்‌, அவரது மரணத்தில்‌ மர்மம்‌ இருப்பதாகச்‌ செய்திகள்‌, ஊடகங்கள்‌ தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியினரான நாங்களும்‌ சந்தேகிக்கின்றோம்‌.

எப்போதெல்லாம்‌ தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம்‌, ஆட்சியாளர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள்‌ மர்மமான முறையில்‌ மரணமடைந்ததுதான்‌ வரலாறு. தலைமைச்‌ செயலாளராக பணியாற்றிய ராயப்பா, டி.ஜி.பி.யாக ஆக பணியாற்றியதுரை மற்றும்‌ அண்ணாநகர்‌ ரமேஷ்‌ மற்றும்‌ அவரது குடும்பம்‌, சாதிக்பாட்ஷா போன்ற மர்ம மரணங்களோடு வெங்கடாஜலம்‌ மரணமும்‌ இணைந்துள்ளது என்று மக்கள்‌ மத்தியில்‌ பேசப்படுகிறது என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து