முக்கிய செய்திகள்

பக்தர்களுக்கு அனுமதி இல்லை: பழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      ஆன்மிகம்
Palani-temple 2022 01 12

Source: provided

பழனி : பக்தர்கள் இன்றி பழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் கோவில் வலைதளம் மற்றும் யூ டியூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானது தைப்பூச விழாவாகும். இதற்காக கடந்த 1 வாரமாகவே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக வருகிற 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கோவில்கள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பழனி கோவிலிலும் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பஸ்களிலும், வாகனங்கள் மூலமும் பழனியில் குவிந்து வருகின்றனர்.

தைப்பூசத்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை பழனி கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. காலை 6.45 மணி முதல் 7.10 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு வேல், மயில், சேவல் உருவம் பொறித்தமஞ்சள் நிற கொடி படத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது கோவில் மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் யானை கஸ்தூரி முன்னே செல்ல கொடி உள்பிரகாரம் வழியாக எடுத்து செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கொடி கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன், உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 3 நாட்களாகவே பழனி கோவிலை நோக்கி லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணனம் உள்ளனர். இதனால் மலைக்கோவிலில் இரவு நடைபெறும் தங்கரத புறப்பாடு இன்று வரை இருக்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தைப்பூச விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் கோவில் வலைதளம் மற்றும் யூ டியூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து