முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைப்பூச திருவிழாவிற்காக காவடிகளுடன் திருச்செந்தூர், பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று தைப்பூச திருவிழா பக்தர்களின்றி களையிழந்து காணப்பட்டது. குறிப்பாக, திருச்செந்தூர், பழனியில் பக்தர்கள் கூட்டம் திரளாக காண்ப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. 

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.  அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் என அனைத்து நிகழ்வுகளும் ஆகம விதிப்படி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.  

வழக்கமாக தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தம் வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து விடலை கோவில் பிள்ளையார் சன்னதி வரை வந்து கோபுரத்தை நோக்கி கும்பிட்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.  தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் கோயில் வளாகத்துக்கு வந்து விடாமல் இருப்பதற்காக கோவில் நுழைவு வாயில் டோல் கேட்டில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

பழனி

முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாதயாத்திரைக்குப் புகழ்பெற்ற தைப்பூசத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கும் முன்னரே மதுரை, கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனியை நோக்கி பக்தர்கள் பாதயாத்திரையாக செல்ல தொடங்கினர். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. (நேற்று ) தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் திரண்டனர். மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லாததால் மலையடிவாரம் வந்த பக்தர்கள் கிரிவீதிகளில் மலையைச் சுற்றிவந்து அடிவாரம் பாதவிநாயகர் கோயிலில் வழிபட்டனர். இதனால் கிரிவீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டமாகக் காணப்பட்டது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்து கிரிவீதிகளில் ஆடிவந்தனர். பலர் முகத்தில் அலகு குத்தி வேலுடன் வந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பழனி சண்முக நதியில் பக்தர்கள் திரளாக முடிகாணிக்கை செலுத்தியதால் நதிக்கரையோரம் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பழனி மலைக்கோயில் அடிவாரம், இடும்பன்கோயில், சன்னதி வீதி, சண்முக நதி, பெரியநாயகிம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் எங்கு நோக்கினும் காவி உடை அணிந்த பக்தர்கள் திரளாகக் காணப்பட்டனர். பழனி நகரமே பக்தர்கள் கூட்டத்தால் விழாக்கோலம் பூண்டிருந்தது.

தைப்பூச விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற முகக்கவசம் அணியாத பக்தர்களுக்கு இலவசமாக முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வைக்கப்பட்டிருந்த உணவு பாதுகாப்பானதாக உள்ளதா என உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தைப்பூச விழாவிற்குப் பல ஆண்டுகளாகப் பாதயாத்திரையாக பழனிக்கு வரும் பக்தர்கள், முதன்முறையாக இந்த ஆண்டுதான் மலைக்கோயில் மேல் உள்ள தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்காமல் ஊர் திரும்புகிறோம் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

குன்றம்

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் வாசலில் நின்று கோவில் நுழைவாயிலில் உள்ள கதவு முன்பு நின்று வேல் முற்றும் மயிலுக்கு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர். 

மருதமலை

மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததால் கோவிலின் அடிவாரத்தில் வெளியே நின்று தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து