முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மருத்துவர்களுக்கு 2 மாத சம்பள நிலுவைத் தொகையை வழங்கவும், தங்கும் வசதி செய்து தரவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தங்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தும், கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருபவர்கள் மருத்துவர்கள்.  கொரோனா இரண்டாவது அலையின் போது, மாநில அரசால் நடத்தப்படும் அனைத்து சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் 15,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சென்ற ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலானோருக்கு இந்தத் தொகை வழங்கப்படவில்லை.  சிலருக்கு 7,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய்தான் வழங்கப்பட்டுள்ளது.  முதலில் அம்மா மினி கிளினிக்குகளில் மருத்துவராக நியமிக்கப்பட்டவர்கள் பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படவில்லை.  சில மருத்துவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், தனிமைப்படுத்தும் நாட்கள் ஒரு வாரமாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. 

எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் எவ்வித பாகுபாடின்றி ஊக்கத் தொகை வழங்கவும், அவர்களுக்கு தங்கும் இட வசதி செய்து தரவும், விடுபட்ட மருத்துவர்களுக்கு இரண்டு மாத ஊதியத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து