முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வீடு தேடி உணவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வீடு தேடி உணவு வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

இதுகுறித்து தமிழக அரசு (சமூக நலத்துறை) நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் விதத்தில் சத்துணவு பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இதன்படி 20.01.2022 முதல் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் உயர்நிலைப் பள்ளி மாணவ / மாணவியர் உட்பட அனைத்துக் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் பள்ளி வேலை நாட்களைக் கணக்கிட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி) வரும் குழந்தைகளுக்கு 10.01.2022 முதல் அங்கன்வாடி பணியாளர்களால் சத்துணவு திட்டப் பயனாளி குழந்தைகளுக்கு அவர்தம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அரிசி, பருப்பு மற்றும் முட்டை உலர் உணவுப் பொருட்களாகவும், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா வளரிளம் பெண்கள், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு அவர் தம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உலர் உணவாகத் தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின் மூலம் 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே வழங்கப்பட்டதை விட பள்ளி சத்துணவு பயனாளிகளுக்கு தற்போது கூடுதலாக பருப்பு, முட்டை மற்றும் கொண்டைக் கடலை/ பாசிப் பயிறும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் 42,13,617 பள்ளி மாணவ, மாணவியர் பயனடைவர். இந்த உலர் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களால் கண்காணிக்கப்படும்'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து