முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளாதவர்களுக்கே பாதிப்பு அதிகம் : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தடுப்பூசியை இதுவரை செலுத்திக் கொள்ளாதவர்கள், தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்த பின்னரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுமே பாதிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் 68 விழுக்காடும், ஒரே ஒரு தடுப்பூசி செலுத்தியவர்கள் 12 விழுக்காடு என மொத்தம் 80 விழுக்காடு இப்படித்தான் வருகிறது.

அதே போல 16 விழுக்காடு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள் பாதிகப்படுகின்றனர். அதே போன்று இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் முடிந்தும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளாதவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது என தெரிவித்தனர்.

மேலும் தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும், தடுப்பூசி செலுத்தி 9 முதல் 10 மாதங்கள் கடந்த பின்னரும் பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்களுக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தகுதிவாய்ந்த முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அதே போன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை தினசரி 30-ஆக இருந்தால், 92 விழுக்காடு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். 93.4 விழுக்காடு பல்வேறு இணை நோய் உள்ளவர்கள். எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தற்போது 227 ஆக்சிஜன் ஜெனரேட்டரும், 17 ஆயிரத்து 600 கான்சென்டிரேட்டர்கள் திரவ மருத்துவ ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளது.

இரண்டாம் அலையின்போது 530 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. வெளி மாநிலங்களில் இருந்து ஏற்பாடு செய்தோம். ஆனால் தற்போது, மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணிகளுக்கும் சேர்த்தே 117 மெட்ரிக் டன்னாக தான் உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

சென்னையைப் பொருத்தவரை பாதிப்பு எண்ணிக்கை உயரத்தொடங்கி சற்று குறையத் தொடங்கியுள்ளது.ஆனாலும் இதனை வெற்றியாகக் கருதாமல், இந்த நேரத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கடந்த ஜனவரி 15-ஆம் தேதி சென்னையில் 8,978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது நூறில் 30 விழுக்காடு. இந்த எண்ணிக்கை தற்போது 23.6 விழுக்காடு என குறைந்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து