முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் மழை, வெள்ளம்: 8.39 லட்சம் பேர் பாதிப்பு பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

சனிக்கிழமை, 21 மே 2022      இந்தியா
Assam-rain 2022-05-21

அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 9 பேரும், நிலச்சரிவுகளில் சிக்கி 5 பேரும் என மொத்தம் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் நடப்பு ஆண்டில் முதன்முறையாக பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்திற்கு மொத்தம் 32 மாவட்டங்களை சேர்ந்த 8 லட்சத்து 39 ஆயிரத்து 691 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.வெள்ளத்தில் சிக்கி 9 பேரும், நிலச்சரிவுகளில் சிக்கி 5 பேரும் என மொத்தம் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 7 பேரை காணவில்லை. 3,246 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

நகாவன் மாவட்டம் அதிகம் பாதிப்பிற்கு இலக்காகி உள்ளது. 2.88 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கச்சார் மற்றும் ஹொஜய் மாவட்டத்தில் தலா 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர். அசாமின் கொபிலி, பிரம்மபுத்திரா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. 

நேற்று திசாங், பராக் மற்றும் குஷியாரா ஆகிய ஆறுகளிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடியது. மொத்தம் 6,248 வீடுகள் முழுவதும் சேதமடைந்து உள்ளன. 36,845 வீடுகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி பகுதியளவாக பாதிக்கப்பட்டு உள்ளன. 11 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன. ஹொஜய், லகீம்பூர் மற்றும் நகாவன் மாவட்டங்களில் பல்வேறு சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு உள்ளன. பெரிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் தேங்கிய நீர் ஆகியவற்றால் ரெயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. 

வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நியூ கஞ்ஜங், பியாங்புய், மவுல்ஹோய், நம்ஜேஉராங், தெற்கு பகிதர், மகாதேவ் தில்லா, காளிபாரி, வடக்கு பகிதர், ஜியான் மற்றும் லோடி பங்மவுல் கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. 

 

நிலச்சரிவுகளால் ஜதிங்கா-ஹரங்காஜாவோ மற்றும் மஹூர்-பியாதிங் பகுதிகளில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது என அசாம் பேரிடர் மேலாண் கழகம் நேற்று அறிவித்து உள்ளது. இதுவரை மொத்தம் 1,00,732.43 ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, மொத்தம் 499 நிவாரண முகாம்கள் மற்றும் 519 நிவாரண வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 92 ஆயிரத்து 124 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 24,749 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தொடர்மழை நீடித்து வரும் சூழலில் உட்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி முழுமையாக இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!