முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் ஹாக்கி: அயர்லாந்து அணியை வீழ்த்தியது இந்தியா

திங்கட்கிழமை, 20 ஜூன் 2022      விளையாட்டு
Women s-hockey 2022-06-20

23 வயதுக்குட்பட்டோருக்கான 5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யூனிபர் யு-23 ஹாக்கி போட்டிகள் அயர்லாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஹாக்கி தொடரில் பங்கேற்க, இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணி அயர்லாந்து சென்றுள்ளது. இப்போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் உக்ரைன் அணிகளுடன் விளையாடுகிறது. யூனிபர் யு-23 ஹாக்கி போட்டி தொடரில், நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. 

மேலும், மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2021க்குப் பிறகு, அயர்லாந்து அணியை மீண்டும் எதிர்கொண்டது. இப்போட்டியில், இந்திய ஜூனியர் பெண்கள் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை அபாரமாக வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து, நடைபெறும் ஆட்டத்தில், நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. அதன்பிறகு ஜூன் 22-ம் தேதி உக்ரைனை எதிர்கொள்கிறது. லீக் சுற்று முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.இறுதிப் போட்டி ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

ரிஷப் பண்ட் உடற்தகுதி குறித்து  முன்னாள் பாக். வீரர் விமர்சனம்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து பலர் விமர்சனம் செய்தனர். இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. குறிப்பாக அவர் கேப்டன் பொறுப்பை ஏற்ற காரணத்தால் அவர் தனது தனிப்பட்ட பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வருவதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார். 

பண்ட் குறித்து அவர் கூறுகையில், " நான் அவருடைய விக்கெட் கீப்பிங் பற்றி விவாதிக்க விரும்புகிறேன். நான் ஒரு விஷயத்தை உணர்ந்து கொண்டேன். வேகப்பந்து வீச்சாளர் பந்துவீசும்போது, அவர் மிகவும் தாழ்வாக குனிந்து அமரமாட்டார். அவர் அதிக எடை கொண்டவராகத் தோன்றுகிறார். மேலும் அவரது மொத்த எடை அவர் விரைவாக உயரும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. இது அவரது உடற்தகுதி குறித்த கேள்வியை எழுப்புகிறது. ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா? " என தெரிவித்தார்.

ஒரு தொடரை வைத்து ருதுராஜை குறைவாக மதிப்பிடுவதா? டிராவிட் 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட், 5 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 96 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 131.50. இதனால் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ருதுராஜூக்கு ஆதரவாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது.,

ஒரு தொடரில் விளையாடுவதை வைத்து வீரர்களை மதிப்பிடுவதை நான் விரும்ப மாட்டேன். வாய்ப்பு கிடைத்த அனைவரும் அதற்குத் தகுதியானவர்கள். டி20 கிரிக்கெட்டில் சில நல்ல ஆட்டங்களும் மட்டுமல்லாமல் சில மோசமான ஆட்டங்களும் அமையும். ஒரு இன்னிங்ஸில் தன்னிடம் உள்ள திறமையை நன்கு வெளிப்படுத்தினார் ருதுராஜ் கெயிக்வாட். டி20 கிரிக்கெட்டில் சிலசமயம் ரன்கள் எடுக்க முடியாத நிலை ஏற்படும். எந்த வீரரின் பங்களிப்பிலும் நாங்கள் ஏமாற்றம் அடையவில்லை. நேர்மறை எண்ணங்களுடன் அதிரடியாக விளையாடவே நாங்கள் எண்ணினோம். அதை முயலும்போது எப்போதும் சாதகமான முடிவுகள் கிடைக்காது என்றார். 

'சபாஷ் மித்து' படம்: டிரெய்லர் வெளியீடு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் சமீபத்தில் அறிவித்தார். இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்டுகள், 232 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணி பங்கேற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடினார். 2019 டிசம்பர் 3, மிதாலி ராஜின் பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது.  சபாஷ் மித்து என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டது. 

இந்த வருடம் பிப்ரவரி 4 அன்று படம் வெளிவருவதாக இருந்தது. பிறகு வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சபாஷ் மித்து படம், ஜூலை 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சபாஷ் மித்து படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. டெஸ்டில் 1 சதமும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களும் எடுத்துள்ளார் மிதாலி ராஜ். அதேபோல டெஸ்டில் 4 அரை சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 64 அரை சதங்களும் டி20யில் 17 அரை சதங்களும் எடுத்துள்ளார். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது குறிப்பிடத்தக்கது.

50% டிக்கெட் பணம் தரப்படும்: கர்நாடகா கிரிக்கெட் சங்கம்

இந்தியா தென்னாப்பிரிகாவுக்கு இடையேயான 5வது கடைசியான முக்கியமான போட்டி பெங்களூருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்திய அணி பேட்டிங் விளையாடிக்கொண்டிருந்த போது 3.3 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்படது. இரவு முழுவதும் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்தத் தொடர் 2-2 என்ற சமநிலையில் இருந்ததால் இந்தப் போட்டியை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

“இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். விதிமுறைகளின்படி கிரிக்கெட்டில் ஒரு பந்து வீசினாலும் டிக்கெட் பணம் திருப்பித் தரப்படமாட்டாது. இருப்பினும் கேஎஸ்சிஏ கிரிக்கெட் ரசிகர்களுக்காக டிக்கெட் பணத்தில் 50 சதவிகித பணத்தை திருப்பித்தர இருக்கிறது. அசல் டிக்கெட்டை கொண்டுவந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதற்கான நடைமுறைகள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்” என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது. 

பயிற்சியாளரா? கேப்டனா? ஷகிப் அல் ஹசன் மறுப்பு

வங்க தேசம் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ. அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. வங்க தேச அணியில் கேப்டன் ஷகிப் மட்டும் முதல் இன்னிங்ஸில் 51, இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களும் எடுத்தார். இருப்பினும் மற்ற வீரர்களின் மோசமான பேட்டிங் காரணமாக முதல் டெஸ்ட் போட்டி தோல்வியில் முடிவடைந்தது. இதைக் குறித்து ஷகிப் அல் ஹசன் கூறியதாவது:

இந்தப் போட்டியில் நான் அதிகமாக எதுவும் எதிர் பாரக்கவில்லை. ஆனால், எங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன். முதல் இன்னிங்ஸில் மிகவும் குறைவான ரன் எடுத்ததால் ஆட்டம் மிகவும் பாதித்தது. எங்களிடம் மிகவும் டெக்கினிக்கலாக விளையாடும் வீரர்கள் குறைவு. எல்லோருக்கும் டெக்கினிக்கல் பிரச்சனை இருக்கிறது. இருப்பினும் அவர்களது குறையை கண்டறிந்து சமாளித்து விளையாட வேண்டும். இது ஒருவரின் தனிப்பட்ட இடத்திலிருந்து வர வேண்டும். மேலும் இது பயிற்சியாளரின் வேலை. என்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!