முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை: வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை : கரூர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      தமிழகம்
CM-1 2022 07 02

Source: provided

கரூர் : மக்களுக்கு நன்மை செய்வதற்கே எனக்கு நேரம் போதவில்லை. நான் வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை என்று கரூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

கர்நாடக மாநிலத்தின் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரிக்கு ஆடு தாண்டும் காவிரி என்று பெயர். அதாவது அவ்வளவு குறுகிய அளவுதான் அந்த நீர்ப்பகுதியின் அகலம் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டின் எல்லையில் நுழையும் காவிரி ஆறானது, கரூர் மாவட்டம், குளித்தலையில் பாயும் போது விரிவடைந்து பாயும். அதனால் அதற்கு ‘காகம் கடக்கா காவிரி என்று பெயர். அதாவது காகம் கூட கடக்க முடியாத அளவு என்று அதன் பிரமாண்டத்தைச் சொல்வார்கள்.

பொதுவாக, புதிதாக ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கத்திடம் முதல் ஆறு மாத காலம் எதையும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள். இது தான் வழக்கம்.  இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள், எனவே அவர்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கலாம் என்று சொல்வார்கள்.  துறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் காலம், முதல் ஆறு மாத காலம். அடுத்த ஆறு மாத காலம் என்பது திட்டமிடும் காலமாக அது அமையும். 2-வது ஆண்டுதான் செயல்படுத்தத் தொடங்கும் காலமாக அமையும். ஆனால் ஆட்சிக்கு வந்த நொடியில் இருந்து செயல்படுத்தும் காலமாகத் தொடங்கிய ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி. 

தேர்தல் நேரத்தில் கரூர் மாவட்டத்திற்கென்று அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை, இந்த ஓராண்டிலேயே நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். இந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப்பொருட்களை வாங்க  பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இந்தப் பொருட்களை காட்சிப்படுத்தத் தேவையான காட்சி அரங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு ஏற்று, ஜவுளி உற்பத்தியாளர்களுடன் இணைந்து அத்தகைய பெரும் காட்சி அரங்கம் மற்றும் வளாகம் ஒன்று கரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போன்று கரூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஜவுளிப்பொருட்களின் தரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த பரிசோதனைகளை இங்கேயே மேற்கொள்வதற்காக, சர்வதேச தரத்திலான ஜவுளிப்பொருட்கள் பரிசோதனை நிலையம் ஒன்றும் கரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும். அதே போல் மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று  திருமாநிலையூரில் 47 கோடி ரூபாய் செலவில் நவீன புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

தி.மு.க. ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக அமைந்துள்ளதை என்பதை தெளிவாக அறிய முடிகிறது. அதனால்தான் நான் வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. இப்போது எனக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதற்கு தயாராக இல்லை. அதற்கு நேரமில்லை. 

மானத்தை பற்றி கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட போராடலாம். ஆனால் மானத்தை பற்றி கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் நாம் போராடவே முடியாது என்று தந்தை பெரியார் சொல்வார். அப்படி மானத்தைப் பற்றிக் கவலைப்படாத மனிதர்கள் வைக்கும் விமர்சனத்தைப் பற்றி நான் மதிக்க விரும்பவில்லை. தி.மு.க. ஆட்சியை விமர்சிப்பதன் மூலமாக, என்னை எதிர்த்து கருத்துச் சொல்வதன் மூலமாக பிரபலம் அடையலாம் என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன். 

முதல்வர் நாற்காலியை தமிழக மக்கள் எனக்கு வழங்கி இருக்கக் காரணம்,  தங்களுக்கு நல்லது செய்வான் என்ற நம்பிக்கையில் தான். அந்த நம்பிக்கையை நான் எந்நாளும் காப்பாற்றுவேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து