முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

75-வது சுதந்திர தின விழா: சென்னையில் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி கோலாகலம்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Independence-Day 2022-08-06

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. 

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகிற 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன. கோட்டையில் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். 

இதையொட்டி நேற்று சுதந்திர தின விழா அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது. சுதந்திர தின ஒத்திகையையொட்டி கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 

மெரினா காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் சிவானந்தா சாலை வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன. இதே போன்று பாரிமுனை ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலையை நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி பாலம் வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன. கொடி மரச்சாலை வழியாக பாரிமுனை நோக்கி சென்ற வாகனங்களும் முத்துசாமி சாலை வழியாக திருப்பி விடப்பட்டு இருந்தன. 

பாதுகாப்பு ஒத்திகையையொட்டி கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. நேற்று நடைபெற்றது போன்ற பாதுகாப்பு ஒத்திகை வருகிற 11 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து அந்த 2 நாட்களிலும் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!