முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு: பிரச்சார குறும்படத்தையும் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-2 2022 08 11

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடக்க விழாவில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஏற்றுக்கொண்டனர். 

போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்.மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். 

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன். 

இப்போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி தமிழகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஏற்கப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், ஒரே நாளில் அதிகபட்ச நபர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்தமைக்காக World Records Union மற்றும் Asia Book of Records ஆகிய அமைப்புகள் முதல்வரிடம் அதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.  

அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமலாக்கப் பணியகம், குற்றப்புலனாய்வு துறையை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த புதிய பிரிவு உருவாக்கப்பட்டதன் மூலம்  போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை அடைய பெரும் உதவிகரமாக இருக்கும். 

போதை ஒழிப்பு தொடர்பான தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, தன்னார்வலர்கள் அமலாக்கப் பணியகம், குற்றப்புலனாய்வு துறை இணையதளம் வாயிலாக பங்கேற்கும் 30 மணிநேர விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்மூலம், தன்னார்வலர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இணையதளம் வழியாகவும் மற்றும் நேரடியாகவும் தொடர்ந்து 30 மணிநேரம் மேற்கொள்வார்கள். 

பின்னர், அமலாக்கப் பணியகம், குற்றப்புலனாய்வு துறையினால் தயாரிக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார குறும்படத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் இவ்விழிப்புணர்வு குறும்படம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்காக திரையிடப்பட்டது.

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடக்க விழாவில், சட்டமன்ற உறுப்பினர்  ஜி.கே.மணி, தருமபுரியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து உரையாற்றி, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு,  அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முனைவர்  இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் காத்திகேயன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (குற்றம்) மகேஷ்குமார் அகர்வால், காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால்,  காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து