முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் : அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

சென்னை : வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

அப்போது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடக்கும் அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். கொங்கு மண்டல சுற்றுப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்குகிறார். இதற்காக வருகிற 23-ம் தேதி மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். கோவை செல்லும் முதல்வரை தி.மு.க. தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அவர்களின் வரவேற்பை ஏற்று கொள்ளும் முதல்வர்,  நேராக ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அன்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். 

பின்னர் மறு நாள் காலை 10 மணிக்கு கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 641 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்றுகிறார். தொடர்ந்து முடிவுற்ற 226 திட்ட பணிகளையும் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் 261 புதிய திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

அரசு விழா முடிந்ததும் நேராக பொள்ளாச்சி செல்லும் முதல்வர் அங்கு மாலையில் தி.மு.க. கட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது ஏராளமான மாற்றுக்கட்சியினர் முதல்வர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர். கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு முதல்வர் 25-ம் தேதி திருப்பூர் செல்கிறார். அன்று காலை திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். 

அப்போது தமிழ்நாடு கயிறு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் குண்டடம், கரூர் பகுதிகளில் அமைய உள்ள கயிறு தொழில் குழுமங்களுக்கான அரசாணை, தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு உதவிகள், கயிறு சார்ந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். நிகழ்ச்சிகள் முடிந்ததும், முதல்வர் அன்று மாலை திருப்பூரில் இருந்து கார் மூலம் ஈரோட்டிற்கு செல்கிறார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். மேலும் அதன் அருகே அமைக்கப்பட்ட படிப்பகத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

பின்னர் ஈரோடு செல்லும் அவர் அன்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் 26-ம் தேதி காலை ஈரோட்டில் நடக்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். ஈரோட்டில் நிகழ்ச்சிகள் முடிந்ததும், அங்கிருந்து அவர் கார் மூலம் கோவை செல்லும் அவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். பின்னர் அவர் தனது 4 நாள் பயணத்தை முடித்து கொண்டு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து