முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த பிஎப்ஐ சதி திட்டம் : கேரள சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. தகவல்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      இந்தியா
BFI 2022--09-24

Source: provided

திருவனந்தபுரம் : தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த பாப்புலர் ப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) சதி திட்டம் தீட்டியதாக கேரள சிறப்பு கோர்ட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 3 தினங்களுக்கு முன் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

15 மாநிலங்களில் 93 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையை அடுத்து, அந்த அமைப்பைச் சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் கல்விப் பிரிவுக்கான தேசிய பொறுப்பாளர் கரமனா அஸ்ரஃப் மவுல்வி உள்ளிட்டோரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி கேரள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்தச் சோதனையை மேற்கொண்ட என்ஐஏ-வின் கொச்சி பிரிவு, கேரள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பிஎஃப்ஐ அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் கேரளாவில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மதங்களுக்கு இடையேயும் மதக் குழுக்களுக்கு இடையேயும் பகைமையை உருவாக்குவது, நாட்டுக்கு எதிராக நச்சுக் கருத்துகளை பரப்புவது, இந்திய நீதித் துறைக்கு மாற்றான நீதிமுறையை வலியுறுத்துவது, வன்முறையை நியாயப்படுத்துவது, பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்குவது, லஷ்கர் இ தொய்பா, ஐஎஸ்ஐஎஸ், அல் காய்தா ஆகிய தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளில் இணைந்து செயல்பட இளைஞர்களை ஊக்குவிப்பது, ஜிகாத் எனப்படும் இஸ்லாத்திற்கான போரின் ஒரு பகுதியாக தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றங்களில் பிஎஃப்ஐ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அடிப்படையிலேயே இது குறித்த விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீவிரவாத தடுப்புப் பிரிவு கடந்த 16-ம் தேதி உத்தரவிட்டது. அதன் அடிப்படையிலேயே, பிஎஃப்ஐ அமைப்பின் மீதும் கரமன அஸ்ரப் மவுல்வி உள்பட 13 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த 19-ம் தேதி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 22-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்தபோது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர்களை அவர்கள் குறிவைத்திருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பட்டியல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தொடர் விசாரணைகள் தேவைப்படுகின்றன. கூடுதல் ஆதாரங்களுக்காக மட்டுமல்ல, சமூக வன்முறையை தடுக்கவும் இந்த விசாரணை அவசியம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎப்ஐ அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அந்த அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக 5 வழக்குகளை என்ஐஏ பதிவு செய்துள்ளது. அதில், அவர்கள் தீவிரவாத செயல்களுக்கும், தீவிரவாத பயிற்சி மையங்களுக்கும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கும் நிதி உதவி அளித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து