முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஈஷா' கட்டிடங்களுக்கு விலக்கு: மத்திய அரசு விளக்கமளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      தமிழகம்
kovai-2022-09-27

கோவை ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டிடங்களை கட்டியுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதை அடுத்து எவ்வாறு விலக்கு அளிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், "கல்வி நோக்கத்திற்காகவும், மாணவர் விடுதிக்காகவும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “சட்டத்தை உருவாக்கிவிட்டு, பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பது ஏன்?” என கேள்வி எழுப்பினர். பின்னர, ஈஷா அறக்கட்டளையின் கட்டிடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்று (செப்.28) தள்ளிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து