முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்சோ வழக்குகளை கையாள்வது எப்படி? - காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
Silenthra-Babu 2022 01 02

Source: provided

சென்னை : 18 வயதிற்குட்பட்டவர்கள் திருமணம், காதல் விவகாரங்களில் அவசரப்பட்டு போக்சோ வழக்குகளில் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு போக்சோ வழக்குகளில் கைது நடவடிக்கை மற்றும் புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 31-ம் தேதி நடைபெற்ற போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. 

போக்சோ சட்ட வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை நகலை, சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அது மரணமாக இருந்தாலும் அல்லது பிற குற்றங்களாக இருந்தாலும் உரிய நீதிமன்றத்திற்கு முதல் தகவல் அறிக்கை சென்றடைந்தவுடன், உடனடியாக வழங்க வேண்டும். 

அனைத்து விசாரணை அதிகாரிகளும் பிரிவு 164 குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் அல்லது போக்சோ பிரிவுகளில் பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்களை பெறும் போது வழக்கமான முறையில் செய்வது போல் காணொளி பதிவு செய்யக் கூடாது. ஒவ்வொரு வழக்கையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.

முக்கியமான வழக்குகளில் நீதிமன்றத்தில் இருந்து காணொளி பதிவு எடுப்பது தொடர்பான ஆணை பெறப்பட்டாலோ அல்லது விசாரணை அதிகாரி தேவை எனக் கருதினாலோ மட்டுமே காணொளி பதிவு செய்யப்படல் வேண்டும்.  அவ்வாறு காணொளி பதிவு செய்யப்படும் போது சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துறையை சார்ந்த புகைப்பட கலைஞர்களை கொண்டே காணொளி பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட காணொளி பதிவுகளை மிகவும் பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும்.

போக்சோ வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் இடைக்கால நிவாரணம் பெறுவதற்கான உரிமை குறித்து பாதிக்கப்பட்டவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தை அணுகி இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும். மேலே உள்ள அறிவுறுத்தல்கள் போக்சோ சட்ட வழக்குகளின் அனைத்து விசாரணை அதிகாரிகளாலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுதொடர்பாக அனைத்து நகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து புலனாய்வு அதிகாரிகளுக்கும் மேற்கூறிய அறிவுரைகளை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சுற்றறிக்கை குறிப்பாணையினை பெற்றுக் கொண்டமைக்கு ஏற்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து