முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரும் பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பு; 6 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் 'ஸ்பாடிபை'

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      உலகம்
Spotify 2023 01 24

Source: provided

வாஷிங்டன் : கொரோனா வைரஸ், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், உற்பத்தி - நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பாடல் இசை தளமான ஸ்பாடிபை நிறுவனம் உலகம் முழுவதும் தனது ஊழியர்களில் 6 சதவிகிதம் பேரை பணி நீக்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒட்டுமொத்தமாக 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஸ்பாடிபை முடிவு செய்துள்ளது. 

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ஸ்பாடிபை தெரிவித்துள்ளது. முன்னதாக, உலகம் முழுவதும் உள்ள தங்கள் ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. அதேபோல், அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கி, நிதி சேவை நிறுவனமான கோல்ட்மென் சச்ஸ் சுமார் 3 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அமேசான் நிறுவனமும் தங்கள் ஊழியர்களில் கணிசமான அளவிற்கு பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், கூகுள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக சுந்தர்பிச்சை அறிவித்தார். அதேபோல், இந்தியாவின் பிரபல ஐ.டி. நிறுவனமான விப்ரோ தங்கள் ஊழியர்களில் 452 பேரை பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் ஐடி நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிகழ்வு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து