முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 74-வது குடியரசு தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு : தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      இந்தியா
Murmu 2022-11-18

Source: provided

புதுடெல்லி : இன்று 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு. இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லியில் இன்று 74-வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். டெல்லியில் உள்ள செங்கோட்டையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றுகிறார். பிறகு இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் முப்படைகளின் அணிவகுப்புகளைப் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் எகிப்து அதிபருடன் பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டில் தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சந்தைகள், மக்கள்கூடும் இடங்கள், பிற முக்கிய இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு படையினர், மோப்ப நாய் படையினைக் கொண்டு பயங்கரவாத தடுப்பு சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகளை போலீஸ் படையினர் சோதனை செய்து வருகிறார்கள். சந்தேகத்துக்கு இடமான நபர் என யாரையாவது கண்டால் உடனடியாக போலீசுக்கு அறிவுறுத்துமாறு ஓட்டல்கள், தங்கும் விடுதி நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களிலும் பாதுகாப்பையொட்டிய விழிப்புணர்வு பிரசாரத்தை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். டெல்லி எல்லைகளிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது. அவற்றில் சிலவற்றில் முக அடையாள அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளதாக டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரணவ் தயாள் தெரிவித்தார்.

முன்னதாக குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அல் சிசி செவ்வாய்க்கிழமை மாலை டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் எகிப்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் டெல்லி வந்துள்ளது.

4 நாள் பயணமாக டெல்லி வந்த அல் சிசி, நேற்று ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றார். அங்கு அவரை, ஜனாதிபதி திரெளபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் கைகுலுக்கி வரவேற்றனர். இதையடுத்து, 21 குண்டுகள் முழங்க எகிப்து அதிபர் அல் சிசிக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அல் சிசிக்கு பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதேபோல், டெல்லி வந்துள்ள எகிப்து தூதுக் குழுவினரை பிரதமர் நரேந்திர மோடிக்கு அல் சிசி அறிமுகப்படுத்தினார்.

இன்று நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் அல் சிசி, இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் முப்படைகளின் அணிவகுப்புகளைப் பார்வையிட உள்ளார். இந்த அணிவகுப்பில், எகிப்தின் ராணுவ வீரர்களைக் கொண்ட குழுவும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து