முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயலி விமர்சனம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      சினிமா
Ayali-review 2023 01 30

Source: provided

அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது, உடனடியாகத் திருமணம் செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் அந்தப்பழக்கத்தால் பல பாதிப்புகளை அந்த ஊர்ப் பெண்கள் சந்திக்கிறார்கள். 1990 இல் அந்த ஊரில் இருந்து பள்ளிக்குச் செல்லும் தமிழ்ச்செல்வி என்கிற மாணவிக்குள் பல கேள்விகள். அவற்றிற்குத் துணிச்சலான செயல்கள் மூலம் விடை கண்டறிவதுதான் அயலி இணையத் தொடர். தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபிநட்சத்திரா, அவருடைய அம்மாவாக வரும் அனுமோள் ஆகிய இருவரும் தங்கள் சிறந்த நடிப்பால் தொடர் வேகமாகச் செல்ல உதவுகிறார்கள். தலைமையாசிரியராக நடித்திருக்கும் காயத்ரி, உதவி தலைமையாசிரியாக நடித்திருக்கும் டிஎஸ்ஆர் ஆகிய இருவரின் பாத்திரப்படைப்புகள் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான மோதல்களைச் சரியாகச் சித்தரிக்கின்றன. ரேவாவின் இசையில் பாடல்கள் கதைக்களத்தோடு ஒன்றியிருக்கின்றன. பின்னணி இசை தொடரின் கருத்துகளை மேம்படுத்திக் காட்ட உதவியிருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவில் கிராம மக்களின் பழக்க வழக்கங்கள் அச்சு அசலாகப் பதிவாகியிருக்கின்றன. எழுதி இயக்கியிருக்கும் முத்துக்குமார், சமுதாயத்துக்குத் தேவையான கருத்தை சுவாரசியமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார். ஜீ 5 இணையத்தில் எட்டு பாகங்களாக இருக்கும் இந்தத் தொடர் தமிழ்ச்சமுதாயத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் ஆவணமாக அமைந்துள்ளது எனக் கூறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து