முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புக : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள தலைமை பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஒரு நாட்டின் மனித வளர்ச்சியின் அளவினை நிர்ணயிப்பதிலும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகத் திகழ்வதிலும், முக்கியப் பங்கு வகிப்பது மக்கள் நல்வாழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது. இதன் அடிப்படையில், அனைத்து மக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பினை அளித்திடும் வகையில், அரசு மருத்துவமனைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்; மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்களை நியமித்தல், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் கிடைக்க வழிவகை செய்தல் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசிற்கு உண்டு. ஆனால், பெரும்பாலான மருத்துவத் துறைகளின் தலைமைப் பதவி இடங்களே காலியாக இருக்கும் அவல நிலை திராவிட மாடல் திமுக ஆட்சியில் நிலவுவது வேதனை அளிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்குரியது. திமுக அரசின் திறமையின்மைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் இயங்கும் முக்கியமான இயக்குநரகங்களான மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம், மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம் ஆகியவற்றிற்கான தலைமைப் பதவிகள் எல்லாம் கூடுதல் பொறுப்பில் உள்ள நிலையில், இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளரிடமும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடமும், முதல்வரிடம் பலமுறை மனுக்களை அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக, எந்தெந்த இயக்குநர் பணியிடங்கள் எப்போது காலியாகின்றன என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். இந்தச் சூழ்நிலையில், இயக்குநர் பதவிகள் வகிப்பவர்களின் ஒய்வுக்கு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரே அந்த இடத்திற்கு புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கையை அரசு துவங்கியிருந்தால், முக்கியமான இயக்குநர் பதவிகள் இன்று காலியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது.

முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவத் துறைகளின் இயக்குநர் பணியிடங்களை முறையாக நிரப்பவும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியினை நிரப்பவும், காலியாகவுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்களை நிரப்பவும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து