முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலின் எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி: டெல்லியில் தடையை மீறி காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் : மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      இந்தியா
Karke-Priyanka 2023 03 26

Source: provided

புதுடெல்லி : ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நேற்று நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் தடையை மீறி கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா  உள்ளிட்ட காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது,  பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இது குறித்து குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு அதிரடி தீர்ப்பை அளித்தது. அதற்கு மறுநாள் ராகுல்காந்தி எம்.பி. பதவியை இழந்தார். 

2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. பாராளுமன்ற மக்களவை செயலகம் இந்த நடவடிக்கையை எடுத்தது. ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். எம்.பி. பதவி பறிப்புக்கு பிறகு ராகுல்காந்தி முதல் முறையாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் எந்தவித மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன். சிறையில் அடைத்தாலும் தொடர்ந்து கேள்வி கேட்பேன், மக்களுக்காக குரல் எழுப்புவேன் என்றும் ஆவேசமாக கூறினார். 

இந்த நிலையில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நேற்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. அனைத்து மாநில, மாவட்ட தலைநகரங்களிலும், காந்தி சிலை முன்பாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடைபெறும் சத்தியாகிரகத்தில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காங்கிரசார் நேற்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் இந்த போராட்டம் தொடங்கியது. மாநில தலைநகரம், மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு நடந்த இந்த சத்தியாகிரக போராட்டத்தில் காங்கிரசார் பெரும் திரளாக பங்கேற்றனர். 

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்பதற்காக பிரியங்காகாந்தி, ஜெயராம் ரமேஷ், கே.சி.வேணு கோபால் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இருந்து நேற்று காலை புறப்பட்டனர். 

இந்த நிலையில் காங்கிரஸ் போராட்டம் நடத்த இருந்த ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த பகுதியில் சத்தியாகிரக போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் காங்கிரசார் சத்தியாகிரகத்துக்கு அனுமதி தர முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். 

போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி நினைவிடம் அருகே நடந்த இந்த சத்தியாகிரகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரசாரின் போராட்டத்தையொட்டி டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து