முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைடு, நோபாலுக்கு டிஆர்எஸ் உள்ளிட்ட ஐ.பி.எல். 2023 சீசனில் 5 புதிய விதிகள் அமல்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2023      விளையாட்டு
IPL 2023 03 31

Source: provided

அகமதாபாத் : வைடு, நோபாலுக்கு டிஆர்எஸ் உள்ளிட்ட ஐ.பி.எல். தொடரில் இம்முறை 5 புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன.

ஐ.பி.எல். திருவிழா...

பெரும் எதிர்பார்க்கப்பட்ட 16வது ஐ.பி.எல். சீசன் நேற்று அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கியது. நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்நிலையில், இந்த வருட ஐ.பி.எல். தொடரில் புதியதாக 5 விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

விதி 1: 'வீரர்கள் பட்டியல்':-

வழக்கமாக டாஸ் சுண்டுவதற்கு முன்பாக விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை நடுவரிடம் கொடுக்க வேண்டும். ஆனால் ஐ.பி.எல். தொடரில் இம்முறை டாஸ் சுண்டிய பின்னர் பிறகு அதற்கு தகுந்தபடி விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்து கொள்ளும் புதிய விதிமுறை அறிமுகம் ஆகிறது. மற்றொரு திருப்பமாக நடுவரிடம் விளையாடும் 11 வீரர்களின் பட்டியலை வழங்கிய பின்னரும் மாற்றம் செய்யலாம். ஆனால் இதற்கு எதிரணியின் கேப்டன் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

விதி 2: 'வைடு, நோபாலுக்கு டிஆர்எஸ்':-

கள நடுவர் வழங்கும் வைடு, நோ-பால் ஆகியவற்றை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். இந்த விதிமுறை சமீபத்தில் முடிவடைந்த பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது இது ஐ.பி.எல். தொடரிலும் அறிமுகம் ஆகிறது.

விதி 3: 'நகர்ந்தால் 5 ரன் ':-

பேட்ஸ்மேன்கள் பந்தை அடிப்பதற்கு முன்னரே அவர்களது நகர்வுகளை கணித்து அதற்கு தகுந்தவாறு விக்கெட் கீப்பர் இடது புறமோ அல்லது வலது புறமோ சற்று நகர்வார். இதற்கு தற்போது அபராதம் விதிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பரின் நகர்வுகள் விதிமுறைக்கு மாறாக இருப்பதை களநடுவர் கண்டறிந்தால் பந்தை டெட்பால் என அறிவிக்கலாம். அல்லது வைடு என்றோ, நோபால் என்றோ அறிவித்து ஒரு ரன்னை அபராதமாக விதிக்கலாம். இல்லையென்றால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்களை கொடுக்கலாம்.

விதி 4: நேரத்தை வீண் செய்தால்':-

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களையும் 90 நிமிடங்களுக்குள் வீசி முடிக்க வேண்டும். ஒவ்வொரு ஓவரையும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் வீசி முடிக்க வேண்டும். இல்லையென்றால் வெளிவட்டத்துக்குள் 5 பீல்டர்களுக்கு பதிலாக 4 பீல்டர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். இது இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாக இருக்கக்கூடும்.

விதி 5: 'இம்பேக்ட் பிளேயர்':-

ஐ.பி.எல். தொடரில் முறை 'இம்பேக்ட் பிளேயர்' என்ற புதிய விதியும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி டாஸ் வென்ற பின் வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன் மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். இதில் இருந்து ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே பந்து வீச்சிலோ, அல்லது பேட்டிங்கிலோ மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ளலாம்.

களமிறக்க முடியாது...

இந்த வகையில் ஏற்கெனவே 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையின் கீழ் வெளிநாட்டு வீரரை களமிறக்க முடியாது. இதனால் இந்திய வீரரரைதான் களமிறக்க முடியும். அதேவேளையில் களத்தில் 3 வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் புதிய விதிமுறையின்படி மற்றொரு வெளிநாட்டு வீரரை களமிறக்கலாம். மாற்று வீரராக வெளியே செல்பவர் மீண்டும் தனது பங்களிப்பை வழங்க முடியாது. இந்த 5 விதிமுறைகள் இந்த வருட ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாக உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து