முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர்: சனாதனம் தொடர்பான வழக்கில் உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி :  “ஒரு அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் பேசும் போது எதிர் விளைவுகளை உணர்ந்து பேச வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,  கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த  வருடம் செப்டம்பர் மாதத்தில்  ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.  சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும்,  கொசு, டெங்கு காய்ச்சல்,  மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் அவர் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து அமைச்சர் உதயநிதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன.  வினித் ஜிண்டால் என்பவரும் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  அதில் தம் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.  விசாரணையில் கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள் என நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் தரப்பு,  சனாதன தர்ம ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கவில்லை.  அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கேட்டுள்ளோம் என தெரிவித்தது.

இதனையடுத்து,  நீங்கள் ஒரு சாமானியர் அல்ல. அமைச்சர் பதவி வகிப்பவர்.  அமைச்சராக இருந்து கொண்டு பேசும் போது எதிர்விளைவுகளையும் உணர்ந்து பேச வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்தெரிவித்தது.  இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 15-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து