முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று நெல்லையில் பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      தமிழகம்
Modi 2024-03-17

Source: provided

சென்னை : பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். நெல்லையில் நடக்க உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம்  தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது.  தமிழகத்தில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தொடர்ச்சியாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.  சமீபத்தில் கடந்த 9-ம் தேதி சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனப் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), பால்கனகராஜ் (வடசென்னை) ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

இந்த வாகனப் பேரணியின்போது பிரதமர் மோடிக்கு பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக வேலூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அதே நாளில், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார். 

இதற்கிடையே பிரதமர் மோடி இன்று 15-ம் தேதி தமிழகத்துக்கு மீண்டும் வருகிறார்.   திருவனந்தபுரத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்று மாலை 6.15 மணிக்கு பிரதமர் மோடி நெல்லை வருகிறார். ஏற்கனவே, கடந்த 3 மாதங்களில் 8 முறை பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்து பிரச்சாரம் செய்துள்ளார்.

விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்கிறார். ராணுவ ஹெலிகாப்டரில் வரும் பிரதமர், அகஸ்தியர்பட்டி தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் தரையிறங்குகிறார்.

அங்கிருந்து குண்டுகள் துளைக்காத காரில் புறப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார். வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (நெல்லை), ஜான் பாண்டியன் (தென்காசி), பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி) உள்ளிட்டவர்களை ஆதரித்து பிரதமர் பேசுகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து