முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      தமிழகம்
Saku 2024-04-19

சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.  

மார்ச் 16ம் தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள்,  நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடைபெற்று வந்தன. இந்தக் குழுக்கள் மூலம் நடத்தப்பட்ட வாகன சோதனைகளின்போது,  உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட கோடிக்கணக்கான பணம்,  போதைப் பொருள்கள், ஆபரணங்கள்,  பரிசுப் பொருள்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிக்கும் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்குப் பதிவில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் வாக்குப் பதிவு முடிவடையும் வரை பாதுகாப்புப் பணியில் 190 துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் 15 படையினரைத் தவிர மற்ற படையினர் வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளனர்.

15 படைகளைச் சேர்ந்த வீரர்கள்,  வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், மத்திய துணை ராணுவப் படையினரின் நேரடி கட்டுப்பாட்டிலும்,  வாக்கு எண்ணும் மையத்தின் வளாகமானது மாநில அரசின் ஆயுதப் படை கண்காணிப்பின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையம் முழுமையாக கேமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தினமும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் வாக்குப் பதிவு முடிவடையும் வரையில் பறக்கும் படைகள்,  நிலைக் குழுக்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தன.

தற்போது தேர்தல் நடைபெறவுள்ள அண்டை மாநிலங்களையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக் குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி,  கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி,திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் 171 குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து