முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      உலகம்
Athens-city-2024-04-25

ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. இந்த நிலையில் இதற்கான காரணம் குறித்து அமெரிக்காவின் நாசா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

ஐரோப்பா கண்டத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றானது கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்போனதாக விளங்கி வரும் ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் மையப் புள்ளியாக ஏதென்ஸ் விளங்குகிறது. நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தாயகமாக விளங்கும் இந்த நாட்டில் பல்வேறு சிறப்புவாய்ந்த நினைவு சின்னங்களும், புராதன கட்டிடங்களும் உள்ளன. 

பண்டைய காலம் முதலே வெளிநாட்டினரும் சுற்றுலா பயணிகளும் விரும்பி செல்லும் நகரமாக ஏதென்ஸ் விளங்குகிறது. இந்த நிலையில் ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்பட்டஸ் குன்றுகளை உள்ளடக்கிய பழைய அகோரா, புதிய அகோரா உள்பட ஏதென்ஸ் நகரமே ஆரஞ்சு நிறமாக மாறி காட்சியளித்தது.

இதனால் சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் பீதியடைந்தனர். டூர்கோவூனியா மலை, புனித குன்றுகளை கொண்ட அக்ரோபோலிஸ் ஆகியவையும் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பதுபோல காட்சியளித்தன.

இந்த நிலையில் ஏதென்ஸ் நகரின் இந்த மாற்றத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது, வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த காலத்தில் மேக கூட்டங்கள் நகருவது வாடிக்கைதான். 

இந்த நிலையில் அசாதாரணமாக இந்த மேக கூட்டத்துடன் சாகாரா பாலைவனத்தின் மண்துகள்கள் கலந்ததால் கிரீசை ஆரஞ்சு நிற போர்வை போர்த்தியது போல புழுதி புயல் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 நாட்களுக்கு இந்தநிலை நீடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் ஆரஞ்சு நிறமாக மாறிய ஏதென்ஸ் நகரின் படங்கள்  வலை தளங்களில் வைரலாகி வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து