முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2-ம் கட்ட வாக்குப்பதிவு...

7 கட்டமாக நடைபெறும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. முதல் கட்டத்தில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவற்றில் மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் இது இரண்டாம் மற்றும் கடைசிகட்ட வாக்குப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்டத் தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், இன்று 2-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 

எந்தெந்த மாநிலங்களில்...

1) அசாம்: 5 மக்களவைத் தொகுதிகள் (மொத்தம் 14), 2) பிகார்: 5 (மொத்தம் 40), 3) சத்தீஸ்கர்: 3 (மொத்தம் 11), 4) கர்நாடகா: 14 (மொத்தம் 28), 5) கேரளா: 20 (மொத்தம் 20), 6) மத்தியப் பிரதேசம்: 7 (மொத்தம் 29), 7) மகாராஷ்டிரா: 8 (மொத்தம் 48), 8) மணிப்பூர்: 1, 9) ராஜஸ்தான்: 13 (மொத்தம் 25), 10) திரிபுரா: 1 (மொத்தம் 2), 11) உத்தரப் பிரதேசம்: 8 (மொத்தம் 80), 12) மேற்கு வங்கம்: 3 (மொத்தம் 42), 13) ஜம்மு காஷ்மீர்: 1 (மொத்தம் 5).

முக்கிய வேட்பாளர்கள்...

இன்று நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் பல முக்கிய வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். குறிப்பாக கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆனி ராஜாவையும், பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திராவையும் களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகரை எதிர்கொள்கிறார். இவர்களைத் தவிர மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஹேமமாலினி, கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

கேரளாவில்... 

கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. வயநாடு மக்களவைத் தொகுதியில் முஸ்லிம்கள் 45 சதவீதம், இந்துக்கள் 41 சதவீதம், கிறிஸ்தவர்கள் 13 சதவீதம் பேர் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது வயநாடு தொகுதியில் 65 சதவீத வாக்குகளுடன் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றார். வயநாட்டை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகரை எதிர்கொள்கிறார். 

உத்தரப் பிரதேசம்... 

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இன்று 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அம்ரோஹா, மீரட், பாக்பத், காசியாபாத், கவுதம் புத்தா நகர், புலந்த்சாஹர், அலிகர் மற்றும் மதுரா தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. 8 தொகுதிகளில் மொத்தம் 91 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். உ.பி.யின் மதுரா தொகுதியில் 3வது முறையாக தொடர் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறார் ஹேமா மாலினி, மீரட்டில் ராமாயண சீரியலில் ராமராக நடித்த அருண் கோவில் களம் காண்கிறார். மீரட் அவரது சொந்த ஊரும் கூட. அதேபோல் தற்போது பாஜக வசம் உள்ள அம்ரோஹா தொகுதியில் டானிஷ் அலி காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார். 

தலைவர்கள் பிரசாரம்...

உ.பி.யின் இந்த 8 தொகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்டியா கூட்டணி சார்பில் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி ஆகியோரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் ஜெயந்த் சிங் ஆகியோரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

கர்நாடகாவில்...

கர்நாடகாவில் இன்று உடுப்பி சிக்மகளூரு, ஹசன், தக்சின கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூரு, சாமராஜநகர், பெங்களூரு (ஊரகப் பகுதி), பெங்களூரு வடக்கு, பெங்களு மத்தி, பெங்களூரு தெற்கு, சிக்பல்லபூர், கோலார் ஆகிய தொகுதிகள் தேர்தலை எதிர்கொள்கின்றன. இவற்றில் பெங்களூரு தெற்கு மற்றும் மைசூரு முக்கிய தொகுதிகளாக அறியப்படுகின்றன. பெங்களூரு தெற்கு தொகுதியில் தேஜஸ்வி சூரியா மீண்டும் வெற்றி பெறும் முனைப்பில் களம் காண்கிறார். ஆனால் அவரை எதிர்த்து மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி களமிறக்கப்பட்டுள்ளார். மைசூருவில் பாஜக சார்பில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த யதுவீர் வாடியார் களம் காண்கிறார். கடந்த 2019 தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 25 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த முறை மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25-ல் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது. 3 தொகுதிகளில் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிராவில்... 

மகாராஷ்டிராவில் இன்று 8 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் நான்டட், அமராவதி தொகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நான்டட் தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்த நிலையில் அக்கட்சியில் இருந்து திடீரென  பாஜகவில் இணைந்தார் அசோக் சவான். அத்தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றுள்ள அசோக் சவான் இந்த முறை பாஜகவுக்கு அதை வென்று கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில்... 

டார்ஜிலிங், ராய்கஞ்ச், பலூர்கட் மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. பாலூர்கட் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தார் களம் காண்கிறார். சிட்டிங் எம்.பி.யான அவரை எதிர்த்து பிப்லப் மித்ராவை களமிறக்கியுள்ளது திரிணமூல் காங்கிரஸ். டார்ஜிலிங் பொருத்தவரை சிட்டிங் பாஜக எம்.பி. ராஜு பிஸ்தாவை எதிர்த்து கோபால் லாமாவை திரிணமூல் களமிறக்கியுள்ளது.  கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மேற்குவங்கத்தின் கூச்பெஹார், அலிபுர்துராஸ், ஜல்பாய்குரியில் நடந்த முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 82 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து