முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு

வியாழக்கிழமை, 2 மே 2024      தமிழகம்
Plus-2-Exam-Results 2023-05

Source: provided

சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது. இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் பல்வேறு பாடங்களில் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை. 

அதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இது கல்வித்துறை வட்டாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதில் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை துணை தேர்வின் போது தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை செல்போன் மூலமாகவோ அல்லது வீடுகளுக்கு நேரில் சென்றோ தொடர்பு கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறவேண்டும். 

மேலும் தேர்வு எழுதாததற்கான காரணங்களை கண்டறிந்து, மீண்டும் தேர்வு எழுத சம்மதிக்க வைக்க வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களையும், தேர்வு எழுதாத மாணவர்களையும் இணைத்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். பின்னர் அனைவரையும் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து