முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்கள் மூலம் வேளாண்மைத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்

வியாழக்கிழமை, 23 மே 2024      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வேளாண்மைத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது., விவசாயிகள் மீது மிகுந்த அன்பு கொண்டு விவசாயத்துறை, வேளாண்மைத்துறை என அழைக்கப்பட்ட துறையின் பெயரை வேளாண்மை - உழவர் நலத்துறை எனத்தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டிலே அறிவித்து உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். இத்திட்டங்களால் வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது; உழவர்கள் வளம் பெறுகின்றனர்; தமிழ்நாடு உணவு உற்பத்தியில் முன்னேறியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டமாக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.  பயிர்க் காபீட்டுத் திட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 24 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு கடந்த மூன்றாண்டுகளில் 4,366 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை முதல்வர் பெற்றுத் தந்துள்ளார்.

கடந்த மூன்றாண்டுகளில் மழை, வறட்சி ஆகிய பேரிடர்களால் 12.88 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 582 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 8 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மழை, வறட்சி ஆகியவற்றால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் மொத்தம் 4,342 கோடி ரூபாய் வழங்கப்பட்டு 24 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

கரும்பு விவசாய நிலப்பரப்பு 95 ஆயிரம் எக்டரிலிருந்து 1 லட்சத்து 54 ஆயிரம் எக்டராக அதிகரித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக 651 கோடி ரூபாய் 4 லட்சத்து 40 ஆயிரத்து 575 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 71 விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகைக் கடனாக 600 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

விவசாயிகளுக்கு மூன்றாண்டுகளில் 2,163 டிராக்டர்கள், 9,303 பவர் டில்லர்கள். 288 அறுவடை இயந்திரங்கள். 2,868 பிற விவசாயக் கருவிகள் உட்பட மொத்தம் 16,432 வேளாண் பொறியியல் கருவிகள் ரூ.270 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு 56.97 கோடி ரூபாயில் 1,226 கிணறுகள், மின்சார / சூரிய சக்தி பம்ப்செட்டுகள் 100 சதவிகித மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் நுண்ணீர்ப்பாசன வசதி அமைக்க 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

27.5 கோடி ரூபாய் செலவில் 100 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 10 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் 25 உழவர் சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேளாண்பல்கலைக்கழகத்தின் மூன்று புதிய வேளாண் கல்லூரிகளும் ஒரு தோட்டக்கலை கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் 3,000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, நாகை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 13 கோடியே 40 லட்சம் ரூபாய்ச் செலவில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று வளாகம் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் பயனடைகின்றனர்.

137 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு அளித்த ஊக்கத்தினால் 2021-ல் 4.90 லட்சம் ஏக்கரிலும், 2022-ல் 5.36 இலட்சம் ஏக்கரிலும் 2023-ஆம் ஆண்டில் 48 ஆண்டுகளாக இல்லாத சாதனையாக 5.59 லட்சம் ஏக்கரிலும் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்தனர்.

ரூ.138 கோடியே 82 லட்சம் செலவில் பயறு பெருக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 4,76,507 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மூன்றாண்டுகளில் 11,76,400 எக்டேர் நிலங்களில் ரூ.83.46 கோடி நிதி ஒதுக்கீட்டில் எள். சோயா, பீன்ஸ் முதலான எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்பட்டு 3,04,248 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021 முதல் வேளாண்துறையில் அடைந்துவரும் முன்னேற்றங்களுக்காகப் பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் 2022-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் ஒரே இடத்தில் நான்கு மணி நேரத்தில் 6 லட்சத்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நட்டு முடித்தமைக்காக எலைட் உலக சாதனை புத்தகத்தில் தமிழ்நாடு இடம் பெற்றுப் பாராட்டப்பட்டது.

 

முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால், வேளாண்மைத் துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து