முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் கேள்வித் தாள் கசிவு விவகாரம்: பாட்னாவில் 13 பேர் கைது

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Jail-1

Source: provided

பாட்னா : நீட் கேள்வித் தாள் கசிவு விவகாரத்தில் தேர்வர்கள் உள்பட 13 பேரை பீகார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே பீகாரில் கேள்வித் தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த பீகார் காவல்துறை, சிறப்புக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது. தற்போது, இந்த விவகாரம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள பீகார் காவல்துறை, “நீட் கேள்வித் தாள் கசிந்த விவகாரத்தில் 4 தேர்வர்கள், அவர்களின் பெற்றோர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகார் பொதுப் பணித்துறையில் ஆசிரியர் தேர்வுக் குழுவில் இருந்த ஒருவரும் கைதாகியுள்ளார்.

அனைவரும் நீதிமன்றக்காவலில் உள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். கைதானவர்களிடம் இருந்து கோப்புகள் மற்றும் மின்சாதன பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுக்கு முன்னதாக 35 பேருக்கு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தப் புகார்களை நீட் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) மறுத்திருந்தது. இதற்கிடையே, நீட் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து