இலங்கை வீரர்களுக்கு பயிற்சி தொடருமாம்!

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஆக. - 29 - இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சி தொடரும் என்று மத்திய பாதுகாப்பு துறை இணையமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, இலங்கை நமது நட்பு நாடு. அதனால் அந்த நாட்டு படையினருக்கு இந்தியாவில் அளித்து வரும் பயிற்சி தொடரும். மாநில அரசு ஆட்சேபத்தை பாதுகாப்பு அமைச்சகம் கருத்தில்  கொள்கிறது என்றார்.  கடந்த மே மாதம் 19 ம் தேதி முதல் இலங்கை கடற்படையை சேர்ந்த மேஜர் திஸ்நாயகமொஹோட்டலால்கே வெங்ரா,கேப்டன் ஹெவ்வாசம், கடென்டாகே ஆகியோருக்கு உதகையில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் 11 மாத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து இலங்கை படையினருக்கு இந்தியாவில் எவ்வித ஆயுத பயிற்சியும் அளிக்க கூடாது என்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி தொடரும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கை விமான படையினருக்கு சென்னை தாம்பரம் விமான படை தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் காட்டிய எதிர்ப்பால் இலங்கை வீரர்களை பெங்களூரில் உள்ள விமானப்படை முகாமிற்கு பாதுகாப்பு அமைச்சகம் மாற்றியது. அதற்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அந்த வீரர்கள் பயிற்சியை முடிக்காமல் பாதியிலேயே இலங்கைக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: