முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி மன்னனின் 3-வது கார் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஏப்.27 - மதுரை மோசடி மன்னன் பயன்படுத்தி விற்ற 3 வது காரை(ஸ்கார்பியோ) ஓசூரில் போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். ஏற்கனவே ஆடி, போர்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனருடன் குடியேறியவர் விவேகானந்தன். அங்கு வசித்த நாட்களில் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலும் திருநகர், திருப்பரங்குன்றத்திலும் பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவானார். 

இவர் பயன்படுத்திய சொகுசுகார்களை பல இடங்களில் விற்பனை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி திருநகர் அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி காரை வெறும் 3 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி முதலில் 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு காரின் ஆவணங்களை கொடுத்த பின்பு ஒரு லட்சம் தருமாறு கூறிய விவேகானந்தன், தலைமறைவானார். சில தினங்களுக்கு முன்பு அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். விவேகானந்தன் பயன்படுத்தி விற்ற போர்டு காரை கம்பத்தில் உள்ள ஹானஸ்ட் ராஜ் என்பவரிடம் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில் விவேகானந்தன் விற்ற ஸ்கார்பியோ காரை ஓசூரில் நேற்று தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து திருநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விவேகானந்தனிடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விவேகானந்தன் மீது புகார் கொடுப்பவர்கள் தினம் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு வருகின்றனர். விவேகானந்தனின் மோசடிக்குஉடந்தையாக இருந்த மனைவி மற்றும் மைத்துனர் கெவின் ஆகியோரும் விவேகானந்தனுடன் தலைமறைவாகி விட்டதால் இவர்களுக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த நந்தகோபால் என்பவர் டி.எஸ்.பி பொன்ராமிடம் புகார் கொடுத்தார். அவர் கூறுகையில், திண்டுக்கல் அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து மாறுதலாகி தற்போது கோவையில் உள்ள கல்லூரியில் வேலை பார்க்கும் நிகிதா என்பவர் திண்டுக்கல் கலைக் கல்லூரியில் உதவியாளராக பணியாற்றிய ஜோசப் என்பவரிடம், தனது அண்ணனுடைய நண்பர் மிகப் பெரிய செல்வந்தர், அரசியல் பெரும் புள்ளிகளுடன் தொடர்பு உடையவர். அவர், அரசு வேலைகளை பலருக்கு வாங்கிகொடுத்து வருகிறார். உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு யாருக்கேனும் அரசு வேலை வேண்டும் என்றால் கேளுங்கள். வாங்கிக் கொடுக்கிறோம் என்றார். அவரது பேச்சை நம்பிய ஜோசப், என்னிடம் கூறினார். நானும் எனது அக்கா மகளின் ஆசிரியர்பணிக்காக ஜோசப் உதவியுடன் நிகிதாவை நாடினேன். அவர் ரூ. 6 லட்சம் பணம் கேட்டார். என்னால் 5 லட்சம் ரூபாய் மட்டுமே ஏற்பாடு செய்ய முடிந்தது. இதை நிகிதாவிடம் கூறினேன். அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உள்ள அவரது பங்களாவிற்கு வருமாறு கூறினார். 

பிப்ரவரி 17 ம் தேதி ஆலம்பட்டி பங்களாவிற்கு சென்றேன். அங்கு நிகிதாவிடம் ரூ. 5 லட்சத்தை கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், மீதம் ஒரு லட்சம் கட்டாயம் வேண்டும். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் வேலையை வாங்கி விட வேண்டும். அதனால் மீதத் தொகையான ஒரு லட்சத்திற்கு ஜோசப் ஜாமீன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிகிதா கூறினார். என்னுடன் வந்த ஜோசப்பும் அதற்கு சம்மதித்தார். அதன் பின்னர் வீட்டிற்குள் இருந்து பணம் எண்ணும் எந்திரத்தை எடுத்து வந்து நான் கொடுத்தபணத்தை அந்த எந்திரத்தில் எண்ணி சரிபார்த்து எடுத்துச் சென்றார். அப்போது நிகிதாவின் அண்ணன் கவியும் உடனிருந்தார். 

சில நாட்களுக்கு பின்பு நிகிதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி அவர் கொடுத்த பல செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த எண்களை தவிர கோவையை சேர்ந்த வக்கீல் ஒருவரின் செல்போன் எண்களையும் நிகிதா கொடுத்திருந்தார். அதைதொடர்பு கொண்ட போது அவர்களை பற்றி எங்களுக்கு தெரியாது. என்னை தொடர்பு கொண்டால் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என கூறினார். ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக எங்களை ஏமாற்றி விட்டனர் என புகார் கூறியுள்ளேன். இவ்வாறு நந்தகோபால் கூறினார். 

ஆலம்பட்டியில் உள்ள பங்களாவை மோசடி மன்னன் விவேகானந்தன் கட்டி அதை ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரிக்கு விற்று விட்டதாகவும், அந்த அதிகாரியின் மகன்தான் கவி என்பதும், விவேகானந்தனின் மோசடிகளுக்கு கவியும் உடந்தையாக இருந்திருக்கலாமோ என்று நந்தகோபாலிடம் பெற்ற பணத்தை கவியும் நிகிதாவும் சுருட்டினரா? அல்லது விவேகானந்தனுக்கு கொடுத்தனரா அல்லது இருவருமே பங்கிட்டு கொண்டனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago