முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாசில்தார் தாக்கப்பட்ட விவகாரம்: மு.க.அழகிரியின் மனு தள்ளுபடி

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,ஏப்.29 - மேலூர் தாசில்தார் தாக்கப்பட்ட விவகாரத்தில் தன் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி மு.க.அழகிரி மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது அழகிரிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே ஆளும் கட்சியான திமுக சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கியது. தங்களுக்கு ஒத்துப்போகாத அதிகாரிகளை மிரட்டுவது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என அனைத்து நடவடிக்கைகளிலும் திமுகவினர் ஈடுபட்டு வந்தனர்.  அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. எதிர்க்கட்சியினரும், அதிகாரிகளும் மிரட்டப்பட்டதோடு தாக்குதலுக்கும் உள்ளாயினர்.  மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தாரும், தேர்தல்அலுவலருமான காளிமுத்து மத்திய அமைச்சர் அழகிரி முன்னிலையிலேயே தாக்கப்பட்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வருவாய்த்துறை ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தேர்தல் பணியை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்தனர். இதற்கிடையே மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் (ஆர்டிஓ) சுகுமாறன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்தார். பின்னர் ஆளும் கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியை அழைத்து தன்னை தேர்தல் அலுவலரும், மதுரை மாவட்ட கலெக்டருமான சகாயம் டார்ச்சர் செய்கிறார், மேலூர் சம்பவத்தில் திமுகவினர் மீது பொய் புகார் கொடுக்க கூறி வற்புறுத்துகிறார் எனவே என்னை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்குமாறு கோரி பேட்டியளித்தார். இதை விசாரித்த தமிழக தேர்தல் ஆணையம் வருவாய் அலுவலர் கூறியது பொய் என தெரிந்து, அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தார் காளிமுத்து தேர்தல் அலுவலராகவும் பணியாற்றினார். தேர்தல் அறிவித்ததிலிருந்தே நடுநிலைமையோடு செயல்பட்டார். மேலூர் அருகே திமுகவினர் வாக்களார்களுக்கு பணம் கொடுத்ததை அறிந்து நேரில் சென்று பணத்தை கைப்பற்றியதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார். இதற்கிடையே கடந்த 1 ம் தேதி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன்,  மேலூர் ஒன்றிய திமுக செயலாளர் ரகுபதி, சிவஞானம் ஆகிய 4 பேரும் அனுமதி பெறாத ஒரு ரகசிய கூட்டத்திற்கு மேலூர் அருகே உள்ள நையித்தான்பட்டிக்கு சென்றனர். இவர்கள் வருவதை தெரிந்து கொண்ட மேலூர் தாசில்தார் காளிமுத்து வீடியோகிராபருடன் நையித்தான்பட்டிக்கு சென்றார். அப்போது அந்த ஊரில் உள்ள வல்லடைக்காரர் கோவிலுக்கு மு.க.அழகிரி சென்றார். அப்போது தீபாராதனை தட்டில் அழகிரி ரூபாய் போடும் போது வீடியோ கிராபர் அதை படம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் ஏன் இதையெல்லாம் படம் பிடிக்கிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது மத்திய அமைச்சர் முன்னிலையிலேயே தாசில்தார் காளிமுத்து தாக்கப்பட்டார். மேலும் வீடியோ கேமராவையும் பறிக்க முயன்றனர். இதை தொடர்ந்து சம்பவம் குறித்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரி தாசில்தார் காளிமுத்து புகார் அளித்தார்.  இதன் பேரில் போலீசார் மு.க.அழகிரி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

     தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 4 பேரும் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் சம்பந்தப்பட்ட தாசில்தாரே அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று பின்னர் மறுப்பு தெரிவித்திருக்கிற நிலையில் எங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தனர். மேலூர் தாசில்தார் காளிமுத்துவும் நையித்தான் பட்டியில் என்னை யாரும் தாக்கவில்லை. செருப்புடன் சென்றதால் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது என்றும்,  உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே போலீசில் புகார் கொடுத்தேன் என்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே ஒத்தப்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது எனக் கோரி ஒரு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 21 ம்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகாததால் வழக்கை மறுநாளைக்கு ஒத்தி வைத்தார்.

      இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வக்கீல் குமரேசன்ஆஜராகி வாதிடும் போது, மு.க.அழகிரி மீது தொடரப்பட்ட வழக்குக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார். அழகிரியின் வக்கீல் வெங்கடேசன் வாதிடும் போது, அங்கு சட்டவிரோத செயல் எதுவும் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட தாசில்தாரே தன்னை தாக்கவில்லை என்று கூறிய பிறகு இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற தேவையில்லை. எனவே அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும் வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த பிஎம். மன்னன், ரகுபதி, சிவஞானம் ஆகியோர் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் கோர்ட்டில் தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று மனு செய்திருந்த ஒத்தப்பட்டி கண்ணனின் வழக்கறிஞர் செல்லப்பாண்டி வாதிடும் போது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட தாசில்தார் விசாரணை அதிகாரியிடம் இது தொடர்பாக வேறு மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை.  வீடியோ ஆதாரங்களும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் பொய் என்று தாசில்தார் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. மேலும் ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது அந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று வாதிட்டார்.

   வக்கீல்களின் வாதத்தை கேட்ட நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தனது தீர்ப்பில் கூறும் போது, எப்ஐஆரும்,(முதல் தகவல் அறிக்கை) சம்பவமும் ஒத்துப்போகிறது. புகார் கொடுத்தவரே அதை மாற்றி கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே வழக்கை ரத்து செய்யமுடியாது. இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது என்றார். வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் மு.க. அழகிரியால் தாக்கல் செய்யப்பட்ட மனு டிஸ்மிஸ் செய்யப்பட்ட விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்