நடிகர் விண்டு வீட்டில் சோதனை: ஏராளமான பணம் பறிமுதல்

புதன்கிழமை, 22 மே 2013      சினிமா
Image Unavailable

புது டெல்லி, மே. 23 - ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த 3 வீரர்கள் முன்னாள் வீரர்கள் 4 பேர் சூதாட்ட புரோக்கர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக இந்தி நடிகர் விண்டு தாராசிங் மும்பையில் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் மல்யுத்த வீரர் தாராசிங்கின் மகன் ஆவார். விண்டு தாராசிங்கிற்கு கைது செய்யப்பட்ட புரோக்கர்கள் பவான், சஞ்சய், ஜூபிடர் ஆகியோருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த சூதாட்ட தரகர்களிடம் அவர் ஐ.பி.எல். போட்டியில் பெட்டிங் கட்டியிருக்கிறார். ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் அவருக்கும், வீரர்களுக்கும் தொடர்பு இருந்ததா என்பது பற்றி மும்பை போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூஹூ கடற்கரையில் உள்ள நடிகர் விண்டுவின் வீட்டில் மும்பை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து ஏராளமானபணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. நடிகர் விண்டு ஐ.பி.எல். போட்டிகளை நேரில் கண்டு களித்ததுடன் போட்டி முடிந்த பின்பு நடைபெறும் விருந்துகளிலும் பங்கேற்றுள்ளார். சூதாட்ட வழக்கில் கைதாகி உள்ள முதல் இந்தி நடிகர் விண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: