முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாசலப்பிரதேச முதல்வர் உயிர்தப்பினார்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      இந்தியா
Image Unavailable

இதாநகர்,மே.- 1 - தவாங் நகரில் இருந்து புறப்பட்டு,காணாமல் போனதாக அஞ்சப்பட்ட ஹெலிகாப்டர் பூட்டானில் பத்திரமாக தரையிறங்கியதையடுத்து அருணாசலப்பிரதேச மாநில முதல்வர் டோர்ஜிகண்டு மற்றும் அவர்ருடன் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அருணாசலப்பிரதேச மாநிலத்தில் தவாங் நகர் உள்ளது. இந்த நகரில் சுமார் 300 ஆண்டு பழமையான புத்தகோயில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நகரில் இருந்து அருணாசலப்பிரதேச மாநில முதல்வர் டோர்ஜிகண்டு ஒரு ஹெலிகாப்டரில் இதாநகருக்கு புறப்பட்டார். நேற்றுக்காலை 9 56 மணிக்கு இவரது ஹெலிகாப்டரானது தவாங் நகரில் இருந்து புறப்பட்டது. சரியாக நேற்று காலை 11-30 மணிக்கு இதாநகருக்கு அந்த ஹெலிகாப்டர் போய் சேர வேண்டும். ஆனால் திடீரென்று அந்த ஹெலிகாப்டரை காணவில்லை. இப்படி ஒரு செய்தி பரவியதும் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வருக்கு என்ன ஆனதோ அந்த மாநில மக்கள் அஞ்சினார்கள். காரணம் சில மாதங்களுக்கு ஆந்திராவில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ரெட்டி விபத்தில் சிக்கி பலியானார். அவர் சென்ற ஹெலிகாப்டர் மலைப்பகுதிக்குள் சென்று சுக்குநூறாக நொறுங்கியது. இதில் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். உடல் கருகி பலியானது நினைவு இருக்கலாம். அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதோ என்று அருணாசால பகுதி மக்களும் கலங்கினார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக அருணாசல முதல்வர் பிழைத்துக்கொண்டார். அவர் சென்ற ஹெலிகாப்டர் பத்திரமாக இருப்பதாகவும் பூட்டானில் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இதுகுறித்து முதல்வரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் டோர்ஜிகண்டு சென்ற ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திற்கு சற்று அருகிலேயே அதே நேரம் பூட்டான் பகுதிக்குள்ளே அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் டோர்ஜிகண்டு உயிர்தப்பிவிட்டார். அவருடன் சென்ற ஹெலிகாப்டர் ஊழியர்களும் மற்றும் உறவினர்களும் உயிர்தப்பியதோடு பத்திரமாக இருப்பதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்தது. இந்த ஹெலிகாப்டரில் முதல்வரின் பெண் உறவினர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மற்றும் சிலர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக பின்னர் தகவல் வெளியாகியது. இதையடுத்து சுமார் 5 மணி நேர சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony