முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி பிறந்தநாள் வைரமுத்து தலைமையில் கருத்தரங்கம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன் 3 - தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்தநாளையொட்டி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கலைஞர் 90 பெருங்காவியத்தின் வரலாறு என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சி நடைபெறுகிறது. க்முதல் நாளான நேற்று காமராஜர் அரங்கத்தில் முத்தமிழ் கருத்தரங்கம் நடந்தது. கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார். இயல் தமிழ் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், இசை தமிழ் என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனி, தமிழ் என்ற தலைப்பில் கவிஞர் அருள்மொழி ஆகியோர் பேசினார்கள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கருத்தரங்கை ரசித்தார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

இந்தியாவில் ஆளும்திறன் உள்ள ஒரே தலைவர் கலைஞர்தான். ஆட்சி அதிகாரம் இல்லாதபோது இங்கு திரண்டு இருக்கின்ற கூட்டம்தான் உண்மையான கூட்டம். மொழி என்ற கருவி ஒரு காலத்தில் வழிபாட்டுக்காகவும், உணர்வுகளுக்காககவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் திராவிட இயக்கம் வந்த பிறகுதான் மொழி போர்க்கருவியாக மாறியது.

அடக்கப்பட்ட மக்களை மேம்படுத்த கருணாநிதி தனது எழுதுகோலால் மொழி கருவியை பயன்படுத்தினார். சுவாசம் இருக்கும் வரை இதயம் இயங்கும். பூமி சுற்றும் வரை ஈர்ப்பு இருக்கும். அதுவரை கருணாநிதி தடம் பதித்திருப்பார், கருணாநிதி என்றும் இயங்கி கொண்டு இருப்பார். மனநலத்தோடும், உடல் வலிமையோடும், தமிழ் வளத்தோடும், நூற்றாண்டுகளை கடந்தும் அவர் வாழ வேண்டும்.

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது:- கருணாநிதி பிறந்த நாளையொட்டி வரலாறாய் வாழ்பவர் என்ற தலைப்பில் கவிதை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான கவிதைகள் வந்துள்ளன. முதல் 3 இடங்களை பிடிக்கும் கவிதைகளுக்கு ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். சிறந்த 90 கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு நூலாக வெளியிடப்படும். நாளை (இன்று 3-ந்தேதி) முதல் 10-ந்தேதி வரை சென்னையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டினால் தங்கமோதிரம் ஜூலை மாதம் 7-ந்தேதி வழங்கப்படும் என்றார்.

விழாவில் மு.க.ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள், மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆர்.ராசா, சுகவனம், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், சேகர்பாபு, இலக்கிய அணி துணைச் செயலாளர் பூச்சி முருகன், தாயகம் கவி, கோட்டூர் சண்முகம், கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன், எஸ்.பி.கோதண்டம், நேரு நகர் பாட்ஷா, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கவிஞர் சொற்கோ கருணாநிதி எழுதிய கருணாநிதி பற்றி வாழ்த்து பாடல்களை வடிவேல் கணேஷ் குழுவினர் பாடினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony