முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலிவு விலை கடைகளில் ரூ.50 லட்சம் காய்கறி விற்பனை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 2 - சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்ட பசுமைப்பண்ணை மலிவு விலைக்ககாய்கறி கடைகளில் 12 நாட்களில் ரூ.50 லட்சம் விற்பனையாகியுள்ளது. அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகள் விலையேற்றத்தை தடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா பண்ணை பசுமை காற்கறிகள் விற்பனை திட்டத்தை கடந்த 20-ந் தேதி தொடங்கி வைத்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 இடங்களில் இந்த மலிவு விலை காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் காய்கறிகளை கொள்முதல் செய்து பசுமையாக விற்பனை செய்யப்படுவதால் இத்திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

திட்டம் தொடங்கி 10 நாளில் அதாவது 30-ந்தேதி வரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 492 கிலோ காய்கறிகள் (160 மெட்ரிக் டன்) விற்பனையாகி உள்ளது. மொத்தம் 43 லட்சத்து 25 ஆயிரத்து 369 ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளது. இந்த இரண்டு நாட்களையும் சேர்த்தால் காய்கறிகள் விற்பனை மதிப்பு ரூ.50 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காய்கறிகள் பொதுமக்கள் தேவைக்கு போதுமான அளவு வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் காய்கறிகளை தேர்வு செய்து எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது. ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓட்டன் சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் காமதேனு சுப்ைபர் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து காய்கறி கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

மலிவு விலை காய்கறி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இரவு வரை காத்திருந்து காய்கறிகளை வாங்கி செல்வதால் வெளி மார்கெட் காய்கறி கடைகளில் விற்பனை சரிந்தது. இதனால் அவர்கள் மலிவு விலை கடைகளில் விற்கப்படும் விலைக்கே தற்போது விற்பனை செய்கிறார்கள்.

பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றின் விலையை திடீரென குறைத்தனர். தனியார் நடத்தும் காய்கறி கடைகளில் விலை குறைக்கப்பட்டு இருந்தாலும், ஏழை, நடுத்தர மக்கள் அரசின் காய்கறிகடைகளை நாடிச் செல்கிறார்கள்.

காய்கறிகள் தட்டுப்பாடு இல்லாமல் பசுமையாகவும், நீண்டநேரம் காத்து நிற்காமல் உடனே வாங்கிச் செல்ல ஏதுவாக அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காய்கறிகள் வாங்க வருபவர்கள் பில் போடுவதற்கு ரொம்ப நேரம் காத்து நிற்பதை தவிப்பதற்காக கூடுதலாக பில்லிங் கவுண்டர்கள் திறக்கப்படுகின்றன.

காய்கறிக்கடைகளில் தற்போது 29 எலக்ட்ரானிக் பில்மெஷின் உள்ளது. மேலும் 19 மெஷின் வாங்கப்படுகிறது. மழைக்காலத்தில் பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்க வசதியாக கூடாரம் அமைக்கப்படுகிறது. ஊழியர்கள் பணியில் சேர்வடையாமல் இருப்பதற்காக மேலும் ஒரு ஷிப்டுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

மாலையில் காய்கறிகள் பசுமையாக விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தாமதம் இல்லாமல் காய்கறிகள் கிடைக்க ஒவ்வொரு கடைக்கும் தனித்தனி ஆட்டோ பயன்படுத்தவும் முடிவு செய்யப்படுகிறது. லாரிகளில் கோயம்பேட்டுக்கு வரும் காய்கறிகளை ஆட்டோ ஏற்றி சம்பந்தப்பட்ட கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. உருளை கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை வெளிமாநிலங்களில் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் இல்லாமல் காய்கறிகள் வாங்கி செல்ல வசதியாக வெளிபுறங்களில் காய்கறிகள் குவிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்