முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு: ஆஜராக விலக்கு கோரி தயாளு அம்மாள் மனு

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 9 - ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கலைஞர் டி.வி. யும் ஆதாயம் அடைந்தது என்பது சி.பி.ஐ. வழக்கு. இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பு முக்கிய அரசு சாட்சியாக கலைஞர் டி.வி. யின் பங்குதாரரான தயாளு அம்மாள் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

ஆனால் தமக்கு மறதி நோய் உள்ளிட்டவை இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனு ஒன்றை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் இம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை முதலில் விசாரித்த நீதிபதி வீணா பீர்பால், விசாரணையை முடக்கும் நோக்கத்துடன் தயாளு அம்மாள் மனுத் தாக்கல் செய்திருக்கிறார் என்று கூறியதுடன் மனுவை தனிப்பட்ட காரணங்களுக்காக விசாரிக்க முடியாது என்று கூறினார். 

இதைத் தொடர்ந்து நீதிபதி கவுர் மனுவை விசாரித்து, ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் வேறு எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யுங்கள் என்று கூறிவிட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று தயாளு அம்மாள் சார்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்