விமானப் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்தவர் கைது

Air-hostess

 

புதுடெல்லி, மே 7 - விமானப் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் ஒருவர் பணிவிடை செய்துகொண்டு இருந்தார். அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குல்தீப்சிங் பார்ம் என்ற பயணி, அந்த விமான பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. அப்போது அங்கிருந்த விமான நிலைய போலீசாரிடம் அந்த விமான பணிப்பெண் குல்தீப் சிங் மீது புகார் மனு கொடுத்தார். விமானத்தில் பணிவிடை செய்துகொண்டிருந்த தனது கையை பிடித்து ஆபாச வார்த்தைகளை அவர் கூறியதாகவும், அவர் அப்போது குடி போதையில் இருந்ததாகவும் அந்த மனுவில் விமானப் பணிப்பெண் குறிப்பிட்டிருந்தார். எனவே அந்த பயணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பணிப்பெண் கேட்டுக்கொண்டார். 

இதையடுத்து குல்தீப்சிங் கைது செய்யப்பட்டார். அவர் மீது 354 வது(பாலியல் பலாத்கார முயற்சி) பிரிவின்கீழும், கற்பை இழிவுபடுத்தும் வார்த்தைகளை பிரயோகித்த பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குல்தீப்சிங் கபூர்தலா என்ற நகரத்தைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட அவர் பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ