முக்கிய செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய ஐ.எம்.எப் தலைவருக்கு ஜாமீன் மறுப்பு

புதன்கிழமை, 18 மே 2011      உலகம்
no photo 1

நியுயார்க்,மே.- 18 - பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எப்) தலைவருக்கு நியுயார்க் நீதிமன்றம் ஜாமீன் மறுத்து விட்டது. ஐ.எம்.எப்பின் தலைவராக உள்ள டொமினிக் கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள மன்காட்டன் நகருக்கு சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது அறைக்கு வந்த ஓட்டல் பணிப்பெண்ணை டொமினிக் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் வருவதற்குள் டொமினிக் அங்கிருந்து தப்பி நியுயார்க் நகருக்கு சென்றார்.
அங்கு அவர் பாரீஸ் செல்லும் விமானத்தில் ஏறி உட்கார்ந்த இருந்த போது போலீசார் விமானத்திற்குள் ஏறி அவரை கைது செய்தனர். அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு போய் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குற்றச்சாட்டை மறுத்தார். இருப்பினும் போலீசார் தொடர்ந்து வற்புறுத்தியதால் மரபணு சோதனைக்கு அவர் ஒப்புக் கொண்டார்.
டொமினிக் பிரான்சு நாட்டின் மூத்த அரசியல் தலைவர். அவர் விரைவில் நடைபெறவுள்ள பிரான்சு அதிபர் தேர்தலில் போட்டியிட இருந்தார். அதற்குள் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியதால் அந்த வாய்ப்பை இழந்து விட்டார். கைது செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அவர் நியுயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வக்கீல்களின் வாதத்திற்கு பிறகு நீதிபதி மெலீஸா வரும் 20 ம் தேதி வரை டொமினிக்கை காவலில் வைக்க உத்தரவிட்டு வழக்கையும் அதே தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: