முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டு துளைக்காத காரில் பயணம் செய்யவிரும்பாத மம்தா

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, மே 31 - மேற்குவங்கத்தில் முதல்வராக பதவியேற்றிருக்கும் மம்தா பேனர்ஜி குண்டு துளைக்காத காரையும், முன்னோட்ட பைலட் காரையும் திருப்பி அனுப்பிவிட்டு சாதாரண காரிலேயே பயணம் செய்கிறார். மேற்குவங்காளத்தில் 34 ஆண்டுகளாக நடந்துவந்த இடதுசாரி ஆட்சியை மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து கடந்த 20  ம் தேதி அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மம்தா பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற அன்றே தனது எளிமையை பறைசாற்றும் வகையில் கவர்னர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு நடந்தே சென்று முதல்வர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுவந்து அவரை வாழ்த்தினார்கள். முதல் மந்திரி அலுவலகம் முன்பும் கும்பல் சேர்ந்ததால் பாதுகாப்புக்கு போலீசார் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அப்போது தொடங்கிய எளிமை இப்போதும் தொடர்கிறது. இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் மம்தா பானர்ஜிக்கு குண்டு துளைக்காத காரும், அவரது பயணத்தை முன்னறிவிப்பு செய்ய பைலட் காரும் அளிக்கப்பட்டன. ஆனால் அவற்றை அவர் திருப்பி அனுப்பிவிட்டார். மேலும் சாலையில் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்தி தனக்காக கூடுதல் ஏற்பாடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். 

சாதாரண மக்களைப் போலவே போக்குவரத்து சிக்னல்களை மதித்து தனது காரும் நின்று செல்லும் என உறுதியாக தெரிவித்துள்ளார். இதனால் மம்தா பேனர்ஜிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து போலீசார் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். பயணத்தின்போது கூடுதல் கார்கள், பைலட் கார், குண்டு துளைக்காத கார் எதுவும் தனக்கு வேண்டாம் என்று முதல்வர் மம்தா கூறிவிட்டார் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. நபராஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். எனினும் மம்தா பாதுகாப்புக்காக சாதாரண உடையணிந்த போலீசாரை அதிக அளவில் பணியில் அமர்த்தி இருப்பதாகவும் அவர்கள் முதல்வரைச் சுற்றி வளையம் போல அமைத்து பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்றும்  முதல்வரின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசமும் செய்யமுடியாது என்றும் நபராஜித் உறுதிபடத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்