மத்திய அரசிடமிருந்து எந்த நிதியும் வரவில்லை: முதல்வர்

Image Unavailable

 

சென்னை, ஆக.10 - மாநில அரசு கோரிய ரூ.2 லட்சத்து 50 ஆயிரமம் கோடி ரூபாய் நிதியை பற்றி மத்திய அரசு இதுவரை வாய்திறக்கவில்லை. எந்த நிதியும் வரவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார். சட்டபேரவையில் 2011-12-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீது நேற்று இரண்டாவது நாளாக விவாதம் தொடர்ந்தது. இதில் பேசிய விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி மத்திய அரசு தமிழக அரசின் திட்ட செலவுக்காக 23,535 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதை குறிப்பிட்டு கேட்டதைவிட அதிகமாக கிடைத்தது என்று குறிப்பிட்டதற்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்த அவையில், சற்று முன்பு, காங்கிரஸ்  கட்சியை சார்ந்த உறுப்பினர் விஜயதாரணி, மத்திய அரசு, தமிழக அரசின் திட்ட செலவுக்காக 23,535 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதை குறிப்பிடும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். கேட்டதைவிட அதிகமாக கிடைத்தது என்றார்.

அப்போது, எனது அரசால் கோரப்பட்ட நிதி உதவிகளை மத்திய அரசு இன்னமும் செய்யவில்லை என்று நான் குறிப்பிட்டேன்.

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்பு, மீனவர் நலன், நதிநீர் இணைப்பு, சூரிய ஒளி மின்சார உற்பத்தி, மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கு 2,52,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரி இருந்தேன். இதுவரை எந்த நிதியுதவியும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை. இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

பிரதமரை நான் சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவினை அளித்தேன். அதற்கு இதுவரை எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை.

சற்று முன்பு உறுப்பினர் விஜயதாரணி தமிழ்நாடு அரசு அனுமதி பெற்றுள்ள திட்ட நிதியை பற்றி குறிப்பிட்டும் வகையில் பேசினார்.

2011-12 ஆம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு 23,535 கோடி என, நான் சமீபத்தில் புதுடில்லி சென்று மத்திய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியாவுடன் நடைபெற்ற கூட்டத்தில், நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இந்த 23,535 கோடி ரூபாயில் மத்திய அரசு வழங்கியுள்ள மொத்த நிதியுதவி 2,829 கோடி 50 லட்சம் ரூபாய் மட்டுமே. இந்த நிதி உதவி இயல்பாக வழங்கப்படும் மத்திய உதவியாக, அதாவது சச்ஙுஙிஹங் இடீடூசிஙுஹங் அஙூஙூடுஙூசிஹடூஷடீ ஆக, 588 கோடியே 4 லட்சம் ரூபாயும், வெளிநாட்டு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான மத்திய உதவியாக 43 கோடியே 15 லட்சம் ரூபாயும், பிற திட்டங்களுக்காக மத்திய உதவியாக 2,198 கோடியே 31 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம், ஏற்கெனவே நான் குறிப்பிட்ட, 2,829 கோடியே 50 லட்சம் ரூபாய் மட்டுமே மத்திய அரசின் நிதியுதவியாகும்.

இதுபோக, திட்டப்பணி இலக்காக செலவிடப்படும் நிகரத் தொகை 20,705 கோடியே 50 லட்சம் ரூபாயும் மாநில அரசின் நிதி ஆதாரத்திலிருந்து தான் செலவழிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக, 2011-12 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த ஆண்டு திட்ட ஒதுக்கீட்டில், 23,535 கோடி ரூபாயில், 20,705.50 கோடி ரூபாய் மாநிலத்தின் சொந்த நிதி ஆகும். இதில் 2,829.50 கோடி ரூபாய் மட்டும் தான் மத்திய அரசு தருகிறது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ