முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினர் உட்பட 16 பேர் மீது வழக்கு

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சேலம், அக்.9 - சேலத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை மோசடியாக பறித்ததாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர், சேலம் மாநகராட்சி துணை மேயர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சேலம் சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியானூர் பகுதியில் சேலம் மாவட்ட விவசாய கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இப்பகுதியில் 1008 லிங்க சிவாலயம், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி ஆகியவை உள்ளன. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது 24 செண்ட் நிலத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எடுத்துக் கொண்டது. மீதமுள்ள 76 செண்ட் இடம் எதற்கும் பயனற்றது என்று மாநில வேளாண் அமைச்சகம் சான்றளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நிலத்தை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டதாம். 

இதையடுத்து கடந்த 2009 ம் ஆண்டு அக்டோபர் 15 ம் தேதி நடைபெற்ற ஏலத்தில் தி.மு.க. பிரமுகர் கனகராஜ் என்பவர் நிலத்தை ரூ. 7.67 லட்சத்திற்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏலத்தில் அப்போதைய வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் முறைகேடு செய்ததாகவும், தி.மு.க.வினரை தவிர வேறு யாரும் ஏலத்தில் பங்கேற்க இயலவில்லை என்றும் அ.தி.மு.க. பிரமுகர் அரியலூர் பழனிச்சாமி போலீசில் புகார் அளித்தார். ஆனால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

அண்மையில் அரியலூர் பழனிச்சாமி இது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா, அவரது மனைவி சாந்தி, பிருந்தா செழியன், பாரப்பட்டி சுரேஷ்குமார், வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர்கள் சேகர், செங்கோட்டையன் கவுசிக பூபதி, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், துணை மேயர் பன்னீர் செல்வம், கவுன்சிலரும், வேட்பாளருமான ஜிம் ராமு, மற்றொரு வேட்பாளர் அருண், கூட்டுறவு சங்க தனி அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட 16 பேர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதில் செங்கோட்டையன், கவுசிக பூபதி, லட்சுமணன், பன்னீர் செல்வம், ஜிம் ராமு, அருள்,செல்வராஜ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் நிலத்தை ஏலத்தில் எடுத்த கனகராஜ் அண்மையில் நிலத்தை சங்கத்தின் தனி அலுவலர் பெயருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரயம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்