முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிஸ்சார்ஜ் ஆன எடியூரப்பா சிறையில் அடைப்பு

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர், அக்.20 - நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடகத்தில் தான் முதல்வராக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது இரு மகன்கள் மற்றும் மருமகனுக்கு அரசு நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடி செய்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது லோக் அயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து அதே நீதிமன்றத்தில் எடியூரப்பா சரண் அடைந்தார்.

பிறகு அவரை வருகிற 22-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். 

இதை அடுத்து எடியூரப்பா பெங்களூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த நாளே தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி தன்னை ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறு எடியூரப்பா கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் அவர்  பெங்களூரில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள்  தீவிர சிகிச்சை அளித்தனர்.

என்றாலும் எடியூரப்பா நாடகம் ஆடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் நேற்று எடியூரப்பா விக்டோரியா ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட எடியூரப்பா பெங்களூரில் உள்ள பாராப்பாரா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிறையில் எடியூரப்பாவை சிறைத்துறை டாக்டர்கள் பரிசோதித்தனர். அவர் சிறை மருத்துவமனையில் சேர்க்கப்படாமல் சிறையில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

லோக் அயுக்தா நீதிமன்றம் தனக்கு ஜாமீன் வழங்காததை அடுத்து எடியூரப்பா தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த திங்கட்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்