முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரசாமிக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகள் ரத்து

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

பெங்களூரு, அக்.22 - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளை அம்மாநில ஐகோர்ட்டு நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது. கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தான் பதவியில் இருந்தபோது வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் ஒன்றிற்கும், சுரங்க கம்பெனி ஒன்றிற்கும் ஆதரவா செயல்பட்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குமாரசாமி, அவரது மனைவி அனிதா, மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ. குமார் ஆகியோர் உள்பட குமாரசாமி குடும்பத்தினர் சிலர் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி லோக் அயுக்தா நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வினோத்குமார் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். 

இதுதொடர்பாக குமாரசாமிக்கும் அவரது குடும்பத்தினர் சிலருக்கும் லோக் அயுக்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. லோக் அயுக்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை அடுத்து குமாரசாமியும் அவரது மனைவி அனிதாவும் கடந்த 9 ம் தேதி அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அதன்பிறகு இவர்கள் இருவருக்கும் கர்நாடக ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் தங்கள் மீதான கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் குமாரசாமியும் அவரது குடும்பத்தினரும் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அதாவது ஒரு எம்.பி.யாக இருப்பதால் தன் மீது வழக்கு தொடர பாராளுமன்ற சபாநாயகரிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் தன்மீது வழக்கு தொடர்ந்துள்ள வக்கீல் வினோத்குமார் அதற்கான அனுமதியை சபாநாயகரிடம் இருந்து பெறவில்லை. மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தேவையான ஆதாரங்களையும் அந்த வக்கீல் சமர்ப்பிக்கவில்லை.எனவே தங்கள் மீதான கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குமாரசாமி குறிப்பிட்டிருந்தார். குமாரசாமி தரப்பின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட கர்நாடக ஐகோர்ட்டு, குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!