அத்வானி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் - ராஜ்நாத்சிங்

Image Unavailable

 

புது டெல்லி, நவ. - 9 - பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி நேற்று தனது 85 வது பிறந்த நாளை தனது ரத யாத்திரைக்கு மத்தியில் கொண்டாடினார். அவரை கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங் உட்பட பலரும் பாராட்டி வாழ்த்திப் பேசினார்கள். அத்வானிதான் பிரதமர் பதவிக்கு ஒரு இயற்கையான தேர்வு என்று புகழாரம் சூட்டினார் ராஜ்நாத்சிங்.  பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவரது ரத யாத்திரைக்கு ஒரு சிறிய இடைவெளி விடப்பட்டது. காரணம், அத்வானிக்கு நேற்று 85 வது பிறந்த நாளாகும். தனது பிறந்த நாளை அத்வானி தனது இல்லத்தில் கொண்டாடினார். அப்போது அவருக்கு கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்சபை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, மத்திய பிரதேச, சத்தீஸ்கர், ஜார்கண்டு மாநில முதல்வர்கள் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி பேசினார்கள்.  பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி 1927 ம் ஆண்டு தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தவர். அப்போது பிரிவினை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த நாள் கொண்டாடிய அத்வானி நேற்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டார். ஒரு கட்டத்தில் அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதை துடைத்தபடி புன்சிரிப்போடு அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராஜ்நாத்சிங், அத்வானி பற்றி மிக உருக்கமாக பேசினார். பிரதமர் பதவிக்கான போட்டியில் அத்வானி இல்லையென்று நாளிதழ்களில் பார்க்கிறேன். ஆனால் அதை பார்க்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது. 

காரணம், அத்வானிதான் அந்த பதவிக்கு ஒரு இயற்கையான தேர்வு. இது குறித்து வாஜ்பாய் கூட ஒரு கட்டத்தில் இப்படி சொன்னார். என்னவென்றால் பிரதமர் பதவிக்கு யாரையாவது முன்னிலைப்படுத்த வேண்டும் என்றால் அது நிச்சயம் அத்வானிதான். பெயருக்கு வேண்டுமானால் ஆட்சி மன்றத்தை கூட்டி அறிவிக்கலாம். அது வெறும் சம்பிரதாயம்தான் என்று வாஜ்பாயே சொன்னதாக ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, ஆனந்தகுமார் போன்றவர்கள் கலந்து கொள்ளாதது ஆச்சரியம். இந்த நிகழ்ச்சியின் போது அத்வானியும் அவரது சிந்தனைகளும் என்ற நூல் வெளியிடப்பட்டது. அதற்காக அத்வானி தனது நன்றியை கண்ணீர்மல்க தெரிவித்துக் கொண்டார். பல முக்கிய பிரமுகர்களும் அத்வானி இல்லத்துக்கு வந்து அவரை வாழ்த்திய வண்ணம் இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ