2 ஜி.ஊழல் வழக்கில் தயாநிதிமாறனிடம் விரைவில் விசாரணை

Image Unavailable

புதுடெல்லி, நவ.- 23 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனுக்கு சி.பி.ஐ. விரைவில் சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது. மத்தியமந்திரி சபையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொலைத்தொடர்பு துறை மந்திரியாக தயாநிதி மாறன் பதவி வகித்தார். இவருக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ.அறிவித்தது. இதனால் இவர் மத்தியமந்திரி பதவியை கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். தயாநிதிமாறன் மீது இரண்டு விதமான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  இவர் மிரட்டியதால் தான் ஏர்செல் நிறுவனம் தனது பங்குகளை மலேசிய நிறுவனமான மாக்சிஸ் கம்யூனிகேசனுக்கு விற்றதாகவும், அதற்கு பிரதி பலனாக மாக்சிஸ் நிறுவனம் சன் டைரக்டில் சுமார் ரூ.700 கோடி முதலீடு செய்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்த போது 323 தொலைபேசிகளை தனது குடும்ப நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு சட்ட விரோதமாக பயன்படுத்தியதாகவும்,  இதனால் அரசுக்கு ரூ. 400 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் சென்னை வந்து கலாநிதி, தயாநிதி வீடுகளில் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் ஏர்செல் நிறுவன பங்குகளை தயாநிதிமாறன் அச்சுறுத்தி விற்க வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்த சி.பி.ஐ.முடிவு செய்துள்ளது. இதற்காக தயாநிதிமாறனை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வரவழைக்க சி.பி.ஐ. உயர்அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். எனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு தயாநிதிமாறனுக்கு சி.பி.ஐ. விரைவில் சம்மன் அனுப்பும் என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. ஏற்கனவே தயாநிதிமாறன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அதில், மாக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து தயாநிதிமாறன் ரூ.540 கோடியை சட்டவிரோதமாக பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ