கூடங்குளம் பிரச்சனை: நாராயணசாமியின் வீட்டை முற்றுகை

Image Unavailable

 

புதுச்சேரி, நவ.- 23 - கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்டனர். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை திசை திருப்பி போராட்ட தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசி வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் உரிமை கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.  இந்த போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ஆனால் இந்த தடையை மீறி போராட்டம் நடத்த மக்கள் உரிமை கூட்டமைப்பினர் முடிவு செய்தனர்.  அதன்படி நெல்லித்தோப்பில் உள்ள சுப்பையா சிலை அருகே அவர்கள் நேற்று காலை திரண்டனர். அங்கிருந்து அவர்கள் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார். மனித உரிமைக்கான மக்கள் கழக தலைவர் பேராசிரியர் மார்க்ஸ் முன்னிலை வகித்தார்.  தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, தனித்தமிழ் இயக்க தலைவர் தமிழமல்லன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், அம்பேத்கார் மக்கள் படை தலைவர் மூர்த்தி, சிவில் உரிமைக்கழக தலைவர் அபிமன்னன், தமிழர் களம் மாநில செயலாளர் பிரகாசு, சிங்காரவேலர் முன்னேற்ற கழக தலைவர் சந்திரன், தமிழர் குரல் பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் சுப்பையா சிலையில் இருந்து புறப்பட்டு மறைமலையடிகள் சாலை வழியாக அண்ணா சிலையை அடைந்தது. அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  போலீசார் தடையை மீறி அவர்கள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட சென்றனர். இதையடுத்து 4 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ